நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது. விற்பனை உயர்ந்தது, முழு உற்பத்தி திறனை எட்டியது, செலவுகளை குறைத்தது உள்ளிட்ட பல வகையாக நடவடிக்கைகளை எடுத்ததால் நிகர லாபம் உயர்ந்திருப்பதாக மாருதி தெரிவித்திருக்கிறது. நிகர விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,005 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 38 சதவீதம் உயர்ந்து ரூ.7,337 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல நிகர விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.66,909 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.976 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.695 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 9.9 சதவீதமாக உயர்ந்து ரூ.5,434 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,947 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 2.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 2.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.06 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ 3,411 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 0.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை வழங்கி இருக்கிறது.