இந்தியாவில் விளையும் காபியை தனது 19 ஆயிரம் விற்பனையகங்களில் விற்பனை செய்வதாக ஸ்டார் பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக தென்னகத்தில்(பெங்களூரூ) கிளையைத் தொடங்கியுள்ள ஸ்டார் பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் விளையும் காபியை உலகம் முழுவதும் உள்ள தங்களது விற்பனையகங்களில் விற்பனை செய்வதாக நிறுவனத்தின் சீனா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜான் கல்வர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுதான் இந்தியாவில் மிக உயர் ரக அராபிகா காபி கொட்டைகள் பயிராவதைக் கண்டறிந்தோம். இந்த காபியை சோதனை செய்ததோடு இதை வறுத்து பவுடர் தயாரித்து உபயோகித்தோம். இந்த காபித்தூள் இந்திய மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்திய காபிக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. இதை அனைத்து விற்பனையகங்கள் மூலம் பிரபலப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஸ்டார் பக்ஸின் எக்ஸ்பிரஸோ காபி மையங்களில் இந்திய காபித்தூள் பயன்படுத்தப்படுவதாக டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அவானி தேவ்தா கூறினார்.
அமெரிக்காவின் ஸ்டார் பக்ஸ் நிறுவனமும் இந்தியாவின் டாடா குழுமமும் தலா 50 சதவீத முதலீடு அடிப்படையில் கூட்டாக இந்தியாவில் விற்பனை மையங்களை அமைத்துள்ளன. பெங்களூரூவில் உள்ள கொர மங்களா பகுதியில் இந்நிறு வனத்தின் 30-வது விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
மும்பை, தில்லி, புணேயைத் தொடர்ந்து இப்போது பெங்களூரில் ஸ்டார் பக்ஸ் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விற்பனையகங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளது. பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் ஓரியன் மாலில் இந்த மையங்கள் அமைய உள்ளன.