பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்துக்கு இந்த வருட இறுதியில் நவரத்னா அங்கீகாரம் கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி.ராஜன் தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தின் 37வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், பங்குதாரர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார். விதிமுறைகளின்படி நவரத்னா அங்கீகாரம் பெற்ற நிறுவனம் 30 சதவீத முதலீட்டு முடிவுகளை அந்த நிறுவனமே எடுக்கலாம். அந்த முதலீடு இந்தியாவில் இருக்கலாம் அல்லது வெளிநாட்டில் இருக்கலாம். மேலும் நவரத்னா அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் இயக்குநர் குழுவுக்கு நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் (சில விதி முறைகளின்படி) அதிகாரம் உள்ளது.
நவரத்னா அங்கீகாரம் கிடைக்கும்போது சர்வதேச நிறுவனமாக மாறும் வாய்ப்பு இருக்கும். ஏற்கெனவே இந்த நிறுவனம் மினி ரத்னா நிலையில் இருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் உதவிகள் தேவைப்படாது என்றாலும் கட்டாயத்தின் பேரில் தான் நவரத்னா அங்கீகாரம் கொடுக்கப்படும்.