ரூபாய் மதிப்பு சரிந்ததை தொடர்ந்து, டாலர் வரத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சில சிறப்பு அனுமதிகளை வழங்கியது. இதன் மூலம் 1,750 கோடி டாலர் வரத்துக்கு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இத்தகவலை ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் வங்கிகள் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கான சிறப்பு அனுமதி கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 30 சதவீதம் வரை சரிந்தது. இதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதி இம்மாதம் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த சிறப்பு அனுமதியானது வங்கிகள் வெளிநாடுகளில் டாலராக நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதை திரும்ப செலுத்துவதற்கான குறைந்தபட்ச காலம் 3 ஆண்டுகளும் அதற்கு மேலும் ஆகும். இதற்கான வட்டி 3.5 சதவீதமாகும்.
வங்கிகள் 100 சதவீதம் வரை தங்களது முதல் நிலை (டயர் 1) மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து திரட்டிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
இத்தகைய சிறப்பு திட்டம் மூலம் 2,000 கோடி டாலர் முதல் 2,500 கோடி டாலர் வரை நிதி திரட்டப்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மே முதல் செப்டம்பர் 3 வரையான காலகட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு மிக மோசமான நிலையை எட்டியதாகவும் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 2 முதல் இதுவரை 30 சதவீத அளவுக்கு மதிப்பிழந்ததாகவும் தெரிகிறது. இப்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 16 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
கடந்த நவம்பர் 6-ம் தேதி இந்த சிறப்பு கடன் திரட்டுவதன் மூலம் 1520 கோடி டாலர் திரட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரண்டு வழிகளில் திரட்டப்பட்ட நிதியில் ஒன்று எண்ணெய் நிறுவனங்களுக்கானதாகும்.