அமலாக்கத்துறை (ED)தனது ரூ.1,411 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய நடவடிக்கை பாரபட்சமானது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார்.
தனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கைக்கு எவ்வித ரீதியான பின்னணியும் கிடையாது. இது பகுத்தறிவு அடிப்படையிலான நடவடிக்கையும் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது அமலாக்கத்துறை பாரபட்சமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சொத்து முடக்க நடவடிக்கையானது அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடங்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த விதியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எந்த வகையிலும் கற்பிதம் கூற முடியாது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக வங்கிகளுக்க அளிக்க வேண்டிய கடன் தொகைக்கு நிதி திரட்டும் வளங்கள் கடினமாகி உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக சிவில் வழக்குகள் குறிப்பாக கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றவியல் நடைமுறை சார்ந்திருக்கும். இதற்கு எந்த விதமான அடிப்படை முகாந்திரமும் இருக்காது.
ஊடகங்களில் வெளியான தகவல் மற்றும் அமலாக்கத்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமலாக்கத்துறை எனது பல்வேறு சொத்துகள் மற்றும் யுனைடெட் பிரூவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் – அதாவது பொது நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்காக அமலாக்கத்துறை இங்கு எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.
மேலும் அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தை நாடி அங்கு என்னை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தனக்குப் புரியவில்லை என்று மல்லையா கூறியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக திட்டமிட்டபடி மார்ச் 2-ம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டேன். அந்த சமயத்தில் அமலாக்கத்துறை எத்தகைய விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அப்போது எவ்வித சம்மனும் தனக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் மல்லையா.
அனைத்து அரசு அமைப்புகளுமே அப்போது எனக்கு நீதிமன்றம் நேரில் ஆஜராவதிலிருந்து அளித்திருந்த அனுமதியை ரத்து செய்யுமாறு கோரின. அத்துடன் ஜாமீனில் வெளி வர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கக் கோரின. இத்தகைய சூழலில் வெளிநாட்டிலிருந்து தன்னை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துவதாய் அமைந்துவிட்டது.
புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே தனக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை. அத்துடன் தன்னை விசாரணையின்றி குற்றவாளியாக்கும் முயற்சியாகும். இத்தகைய சூழலில் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளை அணுகி ஒரு குழுவை ஏற்படுத்தி ஒரே முறை மட்டுமே கடன் தொகையை திரும்ப அளிக்கும் வகையிலான சமரச தீர்வு காணுமாறு தான் கூறியிருந்ததையும் விஜய் மல்லையா சுட்டிக் காட்டியுள்ளார்.