வணிகம்

கடந்த நிதியாண்டில் துறைமுக மேம்பாட்டு திட்டங்களில் ரூ.8,341 கோடி முதலீடு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

செய்திப்பிரிவு

கடந்த நிதியாண்டில் 49 துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.8,341 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 10.4 கோடி டன் சரக்குகள் கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: ஒரு வருடத்திற்கு 10.2 கோடி டன் சரக்குகள் கையாளும் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டில் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு 49 திட்டங்களுக்கு ரூ.8,341 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் நிர்ணயித்த இலக்கை விட சரக்குகள் கையாளும் திறன் அதிகமாகியுள்ளது.

முக்கிய பெரிய துறைமுகங் களில் சரக்குகள் கையாளும் திறன் கடந்த 2015-16-ம் நிதி யாண்டில் 96.536 கோடி டன்னாக இருந்தது. இது 2016-17ம் நிதியாண்டில் 106.5 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

காண்ட்லா, ஜேஎன்பிடி, நியூ மங்களூர், கொச்சின், சென்னை, எண்ணூர், சிதம்பரனார், விசாகப் பட்டினம், பாரதீப், கொல்கத்தா, ஹால்தியா, மர்மகோவா என இந்தியாவில் மொத்தம் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. மொத்த சரக்குப் போக்குவரத்தில் 61 சதவீத சரக்குகளை இந்த 12 துறைமுகங்கள் கையாளுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சரக்குகள் கையாளுவதன் வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 6.79 சதவீதமாக இருந்தது.

SCROLL FOR NEXT