தங்கத்தின் விலை கடந்த ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 336 குறைந்தது. கடந்த பத்து நாட்களில் பவுனுக்கு ரூ. 1, 232 சரிந்து காணப்பட்டது.
சென்னையில் கடந்த பத்து நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 336 குறைந்து ரூ. 21 ஆயிரத்து 552க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 694க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 910 குறைந்து ரூ. 42, 670 க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 888 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 736க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 17 ம் தேதி பவுன் ரூ. 22 ஆயிரத்து 784 ஆக இருந்து அடுத்த நாள் ரூ. 112 குறைந்து ரூ. 22 ஆயிரத்து 672 ஆக இருந்தது. 20 ம் தேதி ரூ. 200 குறைந்து பவுனுக்கு ரூ. 22 ஆயிரத்து 416 ஆக இருந்தது. பின்னர் அதிகபட்சமாக 24-ம் தேதி ரூ. 264 குறைந்து பவுன் ரூ. 21 ஆயிரத்து 992க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 27 ம் தேதி வியாழக்கிழமை அதிகபட்சமாக ரூ. 336 குறைந்து ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 552 விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்துத் தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் சையத் அகமது கூறுகையில், “ இந்தியப் பங்கு சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் தங்கத்தின் விலை குறைகிறது” என்றார்.