பரிவர்த்தனை (Transaction)
வணிக நடவடிக்கைகளில் முக்கியமானது பொருட்களை வாங்கு வதும் விற்பதும் ஆகும். இதனை பரிவர்த்தனை (Transaction) என்கிறோம். இந்த பரிவர்த்தனை சந்தை மூலமாகவும் அல்லது ஒரு நிறுவனத்திற் குள்ளும் நடைபெறும்.
ஒரே நிறுவனம், பஞ்சிலிருந்து நூல் தயாரிக்க ஒரு தொழிற்சாலையையும், நூலிலிருந்து துணி நெய்வதற்கு வேறு ஒரு தொழிற்சாலையையும் வைத்திருந்தால், ஒரு தொழிற்சாலையின் பொருளை மற்றொன்று வாங்கி பயன்படுத்துவது நிறுவனத்தினுள் நடைபெறும் பரிவர்த்தனையாகும்.
பரிவர்த்தனையின் தன்மை பொருளின் அளவு, (மொத்தம் அல்லது சில்லறை வியாபாரம்), பரிவர்த்தனை நடைபெறும் எண்ணிக்கை (தினம்தோறும், மாதம் தோறும், என பல காலங்களில் நடைபெறுவது), பரிவர்த்தனை எளிமை யானதாகவும் (தினம் நாம் கடையில் செய்யும் வியாபாரம்), அல்லது சிக்கலானதாகவும் (பன்னாட்டு வியாபாரம் போன்று) இருக்கும். மற்றொன்று, பரிவர்த்தனையின் தன் மைகள் பலநேரங்களில் சட்ட ரீதியாக சிக்கலானதாகவும் இருக்கும்.
பரிவர்த்தனை செலவுகள்
ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் சந்தையிலி ருந்து வாங்கும்போது அதற்குப் பரிவர்த்தனை செலவுகள் ஏற்படும். முதலில் யாரிடம் நமக்குத் தேவையான பொருள், தேவையான தரத் துடன் தேவையான அளவில், சரியான விலையில் கிடைக்கும் என்று தேடுவதற்கு ஆகும் செலவு.
இதற்கு தேடல் செலவு என்று பெயர். பிறகு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்வதற்கான செலவு. அதன் பிறகு ஒப்பந்தப்படி பரிவர்த்தனை நடைபெறுகிறதா என்று கண்காணிக்கும் செலவு. இவையெல்லாம் சேர்ந்ததுதான் பரிவர்த்தனை செலவு. இச்செலவுகளைக் கட்டுபடுத்த நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை தன்னுடைய மற்றொரு தொழிற்சாலையில் தயாரித்து வாங்குவது ( internal transaction) என்ற முடிவுக்கு வரலாம்.
இதிலும் சில கூடுதல் செலவுகளைத் தவிர்க்க முடியாது. நிறுவனத்தில் அளவு பெரிதாகும்போது அதனை நிர்வகிக்க ஏற்படும் செலவு அதிகமாகும்.