ஒரு பொருளின் உற்பத்திச் செலவுடன், லாபத் தொகையையும் (Markup) சேர்த்து பொருளுக்கான விலையை நிர்ணயிப்பது Markup Pricing. ஒரு பொருளின் சந்தையில் ஒரு நிறுவனம் ஓரளவிற்கு தனிச்சிறப்புடன் விளங்கும் போது தனது பொருளுக்கான விலையை சற்று அதிகப்படுத்தி விற்க முடியும் என்ற நிலையில் Markup Pricing பயன்படுத்தப்படும். இதில் Markup என்பது சந்தை விலைக்கும், உற்பத்தி செலவுக்கும் உள்ள இடைவெளி.
Markup-ஐ இரண்டு விதத்தில் குறிப்பிடலாம் - உற்பத்தி செலவில் markup என்றும் அல்லது சந்தை விலையில் markup என்றும் குறிப்பிடலாம். உற்பத்திச் செலவு என்பது இறுதிநிலை செலவு (marginal cost – MC) எனவே markup = (P-MC)/MC என்பது உற்பத்திச் செலவில் markup. markup = (P-MC)/P என்பது விலையில் markup.
ஒரு நிறுவனத்தின் முதலீட்டுச் செலவுகளை அச்செலவுகளால் ஏற்படும் உற்பத்தி முழுமைக்கும் பிரித்து கணக்கிடவேண்டும். உதாரணமாக, ஒரு இயந்திரம் முப்பதாயிரம் அலகுகள் உற்பத்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டு செலவை முப்பதாயிரம் அலகுகளுக்கு பிரித்து விலை நிர்ணயிப்போம், ஆனால் உண்மை உற்பத்தி இதை விடக் குறைவாக இருந்தால் நஷ்டம் ஏற்படும், அல்லது அதிகமாக இருந்தால் எதிர்பாராத லாபம் ஏற்படும். பொதுவாக விலை நேரடி உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வாய்ப்புச்செலவையும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யவேண்டும். இது பெரும்பாலான நிறுவனங்களில் நடப்பது இல்லை.
பல நிறுவனங்கள் அடிக்கடி பொருட்களின் விலைகளை மாற்ற முடியாது. ஆனால் உள்ளீட்டு பொருட்களின் விலைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும், எனவே கவனமாக உள்ளீட்டு பொருட்களின் எதிர்பார்க்கப்பட்ட விலை மாற்றத்தையும் கணக்கில் கொண்டு உற்பத்தி செய்யப்பட பொருளின் விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.
ஒரு பொருளின் விலை-தேவை நெகிழ்ச்சியை பொறுத்து விலை மாற்றத்தை செய்யவேண்டும். ஒரு பொருளுக்கு விலை-தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருந்தால், அப்பொருளின் விலையில் சிறு மாற்றம் செய்தாலும் அதனின் தேவையில் பெரியமாற்றம் உண்டாகும். எனவே சிறிது விலை உயர்ந்தாலும், சந்தையில் அப்பொருளின் தேவை குறையும். எனவே விலை-தேவை நெகிழ்ச்சி அதிகமாக உள்ள பொருளுக்கு அதிக விலை ஏற்றத்தை செய்யக்கூடாது.
ஒரு பொருளுக்கு குறைவான விலை-தேவை நெகிழ்ச்சி இருந்தால் அப்பொருளின் விலையில் பெரிய மாற்றம் இருந்தாலும் அதனின் தேவையில் பெரிய மாற்றம் இருக்காது. எனவே சிறிய விலை-தேவை நெகிழ்ச்சி உள்ள பொருளின் விலையை பெரிய அளவில் மாற்றம் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஒரு பொருளின் சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வியாபாரம் செய்யும். அச்சந்தையில் அந்நிறுவனங்களின் பொருட்களுக்கு விலை-தேவை நெகிழ்ச்சி குறைவாக இருக்கும், அந்நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் மாற்றினாலும் அப்பொருட்களின் தேவையில் பெரிய மாற்றம் இராது.