கருப்பு பணத்தை பற்றி தாமாக முன்வந்து தெரிவிப்பவர்களின் (ஐடிஎஸ்) விவரங்களை ரகசியமாக வைப்பது குறித்து மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறையிடம் தாமாக முன்வந்து தகவல் தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30 ந் தேதி வரை கால அவகாசம் நிர்ணயித்து வருமான வரித்துறை அறிவித்தது. இதன்படி பல்வேறு நபர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் வந்து தகவல் தெரிவித்து வந்தன.
இதுதொடர்பாக அந்த அதிகாரி கூறியதாவது: தாமாக முன்வந்து கருப்பு பணம் பற்றிய தகவல் தெரிவித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமா என்பது குறித்து நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு நிறைய நபர்கள் சந்தேகங்களை கேட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 138-ல் வரிச் செலுத்துபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்; பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதை மேற்கோள் காட்டித்தான் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த புதிய அறிவிப்பில் ரகசிய மாக வைக்கப்படுமா அல்லது வெளி யிடப்படுமா என்பது உறுதியாக கூறப்பட்டிருக்கும். இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக வர்த்தக கூட்டமைப் புகள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி யை சந்தித்த பொழுது இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தக கூட்டமைப்பினர் பேசியுள்ளனர்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கருப்பு பணம் குறித்த விவரங்களை ஜூன் 1-ம் தேதி முதல் தாமாக முன்வந்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. தகவல் தெரிவிக்க வழங்கப்பட்ட 4 மாத கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. தாமாக முன்வந்து விவரங்கள் தெரிவிப்பது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை கேட்டு வந்தனர். மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் இந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மூன்று விளக்கங்களை வெளியிட்டது. மேலும் ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் அளித்தவர்கள் பற்றி வெளியிட விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியலை சமீபத்தில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டது.
தாமாக முன்வந்து தாக்கல் செய்யும் தொகைக்கு வரி மற்றும் அபராதம் மொத்தமாக சேர்த்து 45 சதவீதம் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதற்கு 2 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன்படி நவம்பர் 30-க்குள் அவர்கள் முழு வரித் தொகையை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
அதிக மதிப்புள்ள பணப்பரிவர்த்தனைகள், குறைந்த விலை பங்குகளில் (பென்னி ஸ்டாக்ஸ்) முதலீடு செய்வது ஆகியவற்றை கண்காணிக்குமாறு வருமான வரித்துறை, மூத்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறையிடம் தாமாக முன்வந்து தகவல் தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30 ந் தேதி வரை கால அவகாசம் நிர்ணயித்து வருமான வரித்துறை அறிவித்தது. இந்த நிலையில் இதிலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையை தடுக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
சரியான பான் எண் இல்லாமல் ஆண்டு வருமான தகவலை (ஏஐஆர்) கண்காணிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சரியான பான் எண் இல்லாத தகவல் பட்டியல் ஏற்கெனவே 18 மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சரியான பான் எண் இல்லாமல் அதிக வருமான விவரம் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.