டிவிட்டர் இணையதளம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த மேஜிக் போனி டெக்னாலஜி என்ற நிறுவனம் ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் (ஏஐ) ரோபோ சார்ந்த இயந்திரம் மூலம் கற்பித்தல் உள்ளிட்ட வசதிகளை அளிக்கிறது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு படங்கள் தேடி அளிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான மாட்பிட்ஸ் நிறுவனத்தையும், 2015-ம் ஆண்டில் இயந்திரம் மூலம் கற்பிக்கும் வெட்லேப் நிறுவனத்தையும் வாங்கியது. இப்போது மேஜிக் போனி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இயந்திரங்கள் மூலம் கற்பிக்கும் தொழில்நுட்பத்தை பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜாக் டோர்சி தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேஜிக் போனி ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பொறியாளர்கள், தகவல் ஆய்வாளர்கள், இயந்திர கற்பித்தல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் டிவிட்டர் கோர்டெக்ஸ் நிறுவன பணியாளர்களாவர்.
நிறுவனத்தை எவ்வளவு தொகைக்கு டிவிட்டர் வாங்கியது என்ற விவரத்தை டோர்சி தெரிவிக்கவில்லை. இருப்பினும் 15 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருக்கலாம் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.