வணிகம்

‘செபி’ தீர்ப்பை எதிர்த்து டிஎல்எப் மேல் முறையீடு

பிடிஐ

கட்டுமான நிறுவனமான டிஎல்எப் மீது `செபி’ விதித்த தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்ஏடி) முறையீடு செய்துள்ளது. டிஎல்எப் நிறுவனத்தின் தலைவர், அவரது மகன், மகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் பங்குச் சந்தையில் மூன்று ஆண்டுகள் ஈடுபட `செபி’ தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பங்குச்சந்தை மேல்முறையீட்டு தீர்ப்பு ஆணையத்தில் வெள்ளிக் கிழமை முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டின் போது சில தகவல்களை முதலீட்டாளர்களிடம் மறைத்த தாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 பேருக்கு இத்தகைய தடையை செபி விதித்தது. இருப்பினும் இவர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்க வில்லை. பொதுப் பங்கு வெளியீடு மூலம் இந்நிறுவனம் ரூ.9,187 கோடி திரட்டியிருந்தது. ஜூன் 30, 2014 நிலவரப்படி டிஎல்எப் நிறுவனத்துக்குள்ள கடன் ரூ. 19,000 கோடி.

கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ. 3,500 கோடியை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இந்நிறு வனத்தின் நிறுவனர் உள்ளிட்ட 6 பேருக்கு செபி 3 ஆண்டுகளுக்கு தடை விதித்ததால் இந்நிறுவன பங்கு விலை கடுமையாக சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 110.60 ரூபாயாக இந்த பங்கின் விலை இருக்கிறது.

SCROLL FOR NEXT