ஈரான் அரசு, அமெரிக்கா மற்றும் 5 முன்னணி நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் செய்துகொண்டதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை ஏற்றம் நிலவியது.
ஈரான் அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இடைக்கால நடவடிக்கையாக 700 கோடி டாலர்கள் ஈரானுக்கு கொடுக்கப்படும். இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை சுமார் 2 சதவிகிதம் குறைந்தது.
கச்சா எண்ணெய் விலை குறையும் போது, இந்தியாவின் இறக்குமதி செலவு குறையும், அதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், பணவீக்கமும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய சந்தைகள் இன்று உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 20605 புள்ளியிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 6115 புள்ளியிலும் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலே உயர்ந்து 20626 புள்ளிகள் வரை சென்றது.
வங்கித்துறை, கேபிடல் குட்ஸ், பொதுத்துறை நிறுவனங்கள், எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் இந்த ஏற்றத்துக்கு காரணமாக இருந்தன. ஆனால் ஐ.டி. துறை பங்குகளில் சிறிதளவு சரிவு இருந்தது.
ஜப்பான் சந்தையான நிகிகி 1.54 சதவிகிதம் உயர்ந்தும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 0.47 சதவிகிதம் சரிந்தும் முடிவடைந்தது.
இதனிடையே, வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 பைசா உயர்ந்து ரூ.62.50 ஆக இருந்தது.