வணிகம்

ரூ. 20 ஆயிரம் கோடியை ஓராண்டில் திருப்பித்தர சஹாரா ஒப்புதல்

செய்திப்பிரிவு

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய ரூ. 20 ஆயிரம் கோடியை ஓராண்டில் பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக சஹாரா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 வேலை நாளில் ரூ. 2,500 கோடியை அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சஹாரா குழுமத்தின் பரிந்துரையை புதன்கிழமை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் 30-ம், செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் தலா ரூ. 3,500 கோடியை திருப்பி அளிப்பதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி ரூ. 7,000 கோடியை திருப்பி அளிப்பதாகவும் சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் அளித்துள்ள தகவலை ஆவணமாக பதிவு செய்தால் மட்டுமே புதன்கிழமை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டிய நிதியை செபியிடம் திரும்ப அளிக்கத் தவறியதற்காக சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் குழும இயக்குநர்கள் 2 பேர் மார்ச் 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT