வணிகம்

ஆல்பிரட் மார்ஷலின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?

செய்திப்பிரிவு

ஆடம் ஸ்மித்துக்குப் பிறகு பொருளியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் மார்ஷல் (1842-1924). பொருள்களின் மதிப்பு அல்லது விலையை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி பெரிய சர்ச்சையே நிகழ்ந்த போது, சந்தையில் ஒரு பொருளின் விலையானது அதனின் அளிப்பு மற்றும் தேவையைப் பொறுத்து அமையும் என்ற கோட்பாட்டை உருவாக்கினார் மார்ஷல்.

ஒரு பொருளின் தேவை மற்றும் அளிப்புக் கோடுகள் ஒரு கத்திரிக்கோலின் இரு தகடுகள் போலவும், அவை இரண்டும் சேர்வதுதான் சந்தையின் சமநிலை என்ற கருத்தினை கொடுத்தார். இதைத் தொடர்ந்து விலை மாற்றதிற்கு ஏற்ப எவ்வாறு தேவை மாறுபடுகிறது என்ற ‘விலை-தேவை நெகிழ்ச்சி’, பொருளின் விலையை விட அதிக பயன்பாட்டை அடைந்ததை விளக்கும் ‘நுகர்வோர் எச்சம்’, சந்தை சமநிலை போக்கினை அறியும் ‘சந்தையில் நேரத்தின் பங்கு’ என்ற கோட்பாடு என சந்தை பொருளாதாரத்தை முழுவதும் அறிந்துகொள்ள தேவையான அடிப்படை பொருளியல் சிந்தனைகளைக் கொடுத்தவர் மார்ஷல்.

இறுதிநிலை என்ற கருத்து Jevons, Menger என்ற பொருளியல் அறிஞர்கள் தனித்தனியே உருவாக்கினாலும், அதனை பொருளியலில் முறைப்படுத்தி சேர்த்த பெருமை மார்ஷலுக்கு உண்டு. இறுதிநிலை என்ற கருத்து பொருளியலின் வளர்ச்சியை வெகுவாக உயர்த்தியது. ஒரு தொடர் செயல்பாட்டில் கடைசி செயலின் விளைவு இறுதிநிலை விளைவாகும். நாம் தொடர்ந்து ஒரு பொருளை நுகரும்போது, (வாழைப்பழம்) அடுத்தடுத்த நுகர்ச்சியில் அப்பொருளின் பயன்பாடு குறைந்துகொண்டே போய் ஒரு நேரத்தில் திகட்டிவிடும் அல்லது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதன் விளக்கம் இதுதான். இறுதிநிலை என்ற கருத்தை பொருளாதார செயல்பாடுகளான உற்பத்தி, பகிர்வு, நுகர்வு என்ற எல்லாவற்றிலும் பயன்படுத்தமுடியும்.

நல பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளை அமைத்தவரும் மார்ஷல் தான்.

பொருளியல் ஆராய்ச்சியில் கணிதத்தை புகுத்திய பெருமை மார்ஷலையே சாரும். மார்ஷல் optimization கணிதத்தை பொருளியலுக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு சில கட்டுபாடுகளுக்கு உட்பட்டு எவ்வாறு நுகர்வோர் பயன்பாட்டை அதிகரிக்கின்றனர், உற்பத்தியாளர்கள் எவ்வாறு லாபத்தை அதிகரிக்கின்றனர் என்பதை அறிய optimization கணிதத்தை பயன்படுத்த முடியும்.

ஆடம் ஸ்மித் தொடங்கி எல்லாரும் ‘அரசியல் பொருளாதாரம்’ என்று அழைத்ததை ‘பொருளியல்’ என்று மார்ஷல் அழைக்க ஆரம்பித்தார். ஆல்பிரெட் மார்ஷல் 1890இல் வெளியிட்ட Principles of Economics என்ற புத்தகம் இன்றைய நவீன பொருளியலின் ஆரம்பம் என்று கூறலாம். அது தொடங்கி ‘புதிய தொன்மை பொருளியல்’ என்ற சிந்தனை வளர ஆரம்பித்தது.

SCROLL FOR NEXT