ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தான் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி கூறினார். ஆர்பிஐ துணை கவர்னரான கே.சி. சக்ரவர்த்தியின் (62) பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கவர்னர் ரகுராம் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இதை சக்ரவர்த்தி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெறும் முடிவை கவர்னர் ரகுராம் ராஜனிடம் தெரிவித்துவிட்டதாகவும் ஏப்ரல் 25-ம் தேதி வரை பதவியில் தொடர உள்ளதாகவும் அவர் கூறினார்.
எந்த நாளில் ஓய்வு பெறவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் முழு சுதந்திரம் தனக்கு உள்ளது என்று கருதுவதாகக் கூறிய சக்ரவர்த்தி, பதவியை ராஜினாமா செய்ததில் எந்தவித கருத்து வேறுபாடும் காரணம் இல்லை. பதவி விலகும் முடிவு குறித்து கவர்னருக்கு ஏற்கெனவே அறிவித்து விட்டதாகவும், இது தனது தனிப்பட்ட சொந்த முடிவு என்றும் அவர் கூறினார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவர் சக்ரவர்த்தி. கவர்னர் ரகுராம் ராஜனுடன் எவ்வித கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறியபோதிலும், தன்னை முன்னதாகவே விடுவித்தால் நல்லதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இப்போதைக்கு எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லை. எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 25-ம் தேதிக்குப் பிறகே தான் முடிவு செய்யப் போவதாகக் கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தைச் சந்திக்கப் போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வேலை விஷயமாக கருத்து தெரிவிக்க வேண்டியது கவர்னர் ரகுராம் ராஜனிடம்தான். ராஜினாமா விஷயத்தில் ஆர்பிஐ-தான் முடிவு செய்ய வேண்டும். தனது ராஜினாமா விஷயத்தை நிதியமைச்சரிடம் கவர்னர் தெரிவிப்பார் என்று கருதுவதாக அவர் கூறினார்.
சக்ரவர்த்தி பதவி விலகியதால் இப்போது ரிசர்வ் வங்கியில் 2 துணை கவர்னர் பதவிகள் காலியா கின்றன. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் துணை கவர்னராயிருந்த ஆனந்த் சின்ஹாவுக்குப் பதிலாக இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியில் 4 துணை கவர்னர்கள் இருப்பர். 2 பேர் ரிசர்வ் வங்கியிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் இப்பதவிக்கு வருவர். ஒருவர் பொருளாதார நிபுணராகவும் மற்றொருவர் வங்கித் துறையைச் சார்ந்தவராகவும் இருப்பர்.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2009-ம் ஆண்டு கே.சி. சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டார். துணை கவர்னர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ரொக்கக் கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கியின் தலைவர் பிரதீப் சௌத்ரிக்கும் கேசி சக்ரவர்த்திக்கும் இடையே 2012-ம் ஆண்டில் கருத்து மோதல் ஏற்பட்டது. சிஆர் ஆர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சௌத்ரி வலியுறுத்தினார். ஆனால் அது சரியாக இருக்காது என்று தெளிவாகவும் உறுதிபடவும் சக்ரவர்த்தி தெரிவித்ததால் கருத்து மோதல் உருவானது.
2009-ம் ஆண்டில் மூன்று ஆண்டு பதவிக் காலத்துக்கு நியமிக்கப்பட்ட சக்ரவர்த்திக்கு 2012-ம் ஆண்டில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட காலம் ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது.