டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.121.5 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.100.08 கோடியாக இருந்தது. நிகர விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ. 2,543 கோடியாக இருந்த விற்பனை, இப்போது ரூ.2,852 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்த காலாண்டில் வாகன விற்பனை 15.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 6.08 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இப்போது 7.01 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மோட்டர் சைக்கிள் விற்பனை 11 சதவீதம் உயர்ந்து 2.83 லட்சம் வாகனங்கள் விற்பனையானது. கடந்த வருடம் 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனையாயின.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 3.21 சதவீதம் சரிந்து 291.25 ரூபாயில் முடிவடைந்தது.
மாருதி சுசூகி நிகர லாபம் 23% உயர்வு
நாட்டின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.1,486 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,208 கோடியாக இருந்தது.
நிகர விற்பனை 12.1 சதவீதம் உயர்ந்து ரூ.14,654 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,078 கோடியாக இருந்தது. மூலப்பொருள் விலை குறைவு, அதிக விற்பனை உள்ளிட்ட காரணங்களுக்காக நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
அதே சமயத்தில் அந்நிய செலாவணி காரணமாக நிகர லாபம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 3,48,443 வாகனங்களை விற்பனை செய்தது. இது 2.1 சதவீத வளர்ச்சியாகும். இந்த காலாண்டில் 26,103 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
நடப்பு காலாண்டின் முதல் இரு மாதங்களில் 10.2 சதவீத வளர்ச்சி இருந்தது. ஆனால் உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் 1.74 சதவீதம் சரிந்து 4,471.30 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தம் முடிந்தது.
டாக்டர் ரெட்டீஸ் நிகர லாபம் 80% சரிவு
மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 80 சதவீதம் சரிவடைந்து ரூ.126 கோடியாக இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.625 கோடியாக இருந்தது. அமெரிக்கா மற்றும் வெனிசூலா சந்தையில் விற்பனை குறைந்ததால் நிகர லாபம் சரிந்திருக்கிறது.
அதேபோல வருமானமும் 14 சதவீத சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,757 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ. 3,234 கோடியாக சரிந்திருக்கிறாது. அமெரிக்க மற்றும் வெனிசூலா சந்தையில் இருக்கும் தேக்க நிலை காரணமாக முதல் காலாண்டில் கடும் சிக்கலை சந்தித்திருக்கிறோம், இது தவிர மேலும் பல சிக்கல்கள் காரணமாக நிகர லாபம் சரிந்திருப்பதாக நிறுவனத்தின் இணை தலைவர் ஜிவி பிரசாத் தெரிவித்தார்.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 4.67 சதவீதம் சரிந்து 3,319 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கேவிபி நிகர லாபம் 8% உயர்வு
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) ஜூன் காலாண்டு நிகர லாபம் 8% உயர்ந்து ரூ.146 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.134.58 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,518 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.1,547 கோடியாக இருக்கிறது. ஜூன் காலாண்டு முடிவில் வங்கியின் மொத்த வாராக்கடன் 1.79 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.88 சதவீதத்தில் இருந்து 0.79 சதவீதமாக குறைந்திருக்கிறது.
நிகர வட்டி வரம்பு 3.52 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 3.30 சதவீதமாக இருந்தது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.90,096 கோடியாக இருக்கிறது.
டெபாசிட் 11.07 சதவீதம் உயரந்து ரூ.50,715 கோடியாக இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 5.39 சதவீதம் சரிந்து 481.55 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.