நஷ்டத்தில் இயங்கும் 7 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது. இந்நிறுவனங்களால் அதிகரித்து வரும் நஷ்டத்தைக் குறைக்க இவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையில் குறிப் பிட்டுள்ளது.
நலிவடைந்த மற்றும் நஷ்டத் தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பது தொடர்பான ஆலோசனை வழங் கும் பொறுப்பு நிதி ஆயோக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஏற்கெனவே 26 பொதுத்துறை நிறுவனங்களை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை அமைச்சரவை குழுவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 7 நிறுவனங்களை மூடிவிடலாம் என அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
ஹிந்துஸ்தான் கேபிள், டயர் கார்ப்பரேஷன், ஹெச்எம்டி வாட்சஸ், பேர்ட்ஸ் ஜூட் அண்ட் எக்ஸ்போர்ட் லிமிடெட் (பிஜே இஎல்), சென்ட்ரல் இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்ப ரேஷன் ஆகியன அடங்கும்.
இந்த புதிய பட்டியலுக்கு ஏற்கெனவே பொருளாதார விவகா ரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 நிறுவனங்களை சீரமைப்பது அல்லது அவற்றை விற்பனை செய்வது அல்லது பகுதியளவில் விற்பனை செய்வது என்ற பரிந்துரையும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் கட்டமாக நிதி ஆயோக் அமைப்பு 12 பொதுத்துறை நிறுவனங்களை உத்தி சார் அடிப்படையில் விற்பனை செய்வது தொடர்பான பரிந்துரையை தயார் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது.
மூன்றாம் பட்டியலில் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ், ஸ்கூட்டர்ஸ் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் புளோரோ கார்பன் ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.
வரும் நிதி ஆண்டில் பொதுத்துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 72,500 கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ரூ. 15 ஆயிரம் கோடியை உத்திசார் விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 45,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இதுவரை ரூ. 30 ஆயிரம் கோடியை மட்டுமே திரட்டியிருந்தது. இதுவும் அரசு நிறுவனங்களின் பங்குகளில் பகுதியளவு விற்பனை செய்தது, அரசு நிறுவனப் பங்குகளை திரும்ப வாங்கியது மற்றும் பரிவர்த்தனை வர்த்தக நிதியம் (இடிஎப்) ஆகியன மூலம் திரட்டப்பட்டது.