கடந்த நிதி ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என மத்திய தொழிலாளார் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பிஎப் அறங்காவலர் குழு 8.65 சதவீத வட்டி வழங்க முடிவெடுத்துள்ளது. 8.65 சதவீதம் வட்டி வழங்கினாலும் கூட 158 கோடி ரூபாய் உபரியாக இருக்கும். இது குறித்து தேவைப்பட்டால் நிதி அமைச்சகத்திடம் விவாதிப்பேன். 8.65 சதவீத வட்டிக்கு ஒப்புதல் வழங்குமாறு நிதி அமைச்சகத்திடன் கோரிக்கை வைப்பேன். எப்படி இருந்தாலும் இந்த தொகை பணியாளர்களுக்கு வழங்கப்படும், எப்படி எப்போது என்பதுதான் முடிவு செய்யப்பட வேண்டும் என பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
பிஎப் வட்டி விகிதத்தை அறங்காவலர் குழு முடிவு செய்யும். ஆனால் அறங்காவலர் குழு முடிவிற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்கப்படும் பட்சத்தில் பிஎப் தொகைக்கான வட்டி அவர்களது கணக்கில் வைக்கப்படும். பிஎப் அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளும்.
ஆனால் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு 8.8 சதவீத வட்டியை பிஎப் அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாகக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து 8.8 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்றவாறு பிஎப் வட்டி விகிதத்தை 0.50% குறைக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச் சகத்துக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. ஆனால் வட்டி விகிதம் அந்த அளவுக்குக் குறைக்கப்படவில்லை.