புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 60 பில்லியன் டாலர்கள் வாராக்கடனுடன் 2016-ல் அடியெடுத்து வைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி வாராக்கடன்களை வசூல் செய்ய வங்கிகளுக்கு காலக்கெடு விதித்துள்ளதும், பேமெண்ட் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளும் இந்த ஆண்டில் களமிறக்கப்படும் நிலையில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்களது போட்டித்திறனை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வங்கிகளின் போட்டித்திறன் என்பது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான தரநிலையை உயர்த்துவதாகும். இதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று வங்கித்தலைவர்கள் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சார் தெரிவிக்கும் போது, 1.5 ட்ரில்லியன் மதிப்புள்ள வங்கித் துறையில் தொழில்நுட்பங்களின் பங்களிப்பே வரும் காலங்களில் வங்கிச் சேவையை தீர்மானிக்கும். இந்த வகையில் புதிதாக வரும் பேமெண்ட் வங்கிகள், சிறு நிதி வங்கிகள் பெரிய அளவுக்கு சந்தையைப் பிடிக்க உத்திகளை வகுக்கும் என்றார்.
பொதுத்துறை வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறும்போது, தற்போது வங்கித்துறையில் நிலவி வரும் சம்பளம் மற்றும் பிற செலவின ஒப்பந்தங்களிலிருந்து இந்த புதிய வங்கிகள் விடுவிக்கப்பட்டதாக இருக்கும். எனவே புதிதாக வரும் வங்கிகள் எந்த வித இடர்பாடும் இன்றி சந்தைக்குள் அடியெடுத்து வைப்பார்கள். இவர்கள் புதிய செயலமைப்புடன், வினியோக மாதிரிகளுடன் களத்தில் இறங்க முடியும் ஏனெனில் இவர்களுக்கு ஏற்கெனவே இந்தத் துறையில் உள்ள தொழிலாளர் ஒப்பந்தங்கள், சம்பள வரம்புகள் கிடையாது, என்றார்.
மேலும், ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ஒவ்வொரு முறை ரெபோ விகிதத்தை குறைக்கும் போதும் வங்கிகள் அதன் முழுப்பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மாறாக, ரெபோ விகிதம் அதிகரிக்கப்பட்டால் உடனே வங்கிகள் அதனைச் செயல்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்தமாக ஒரே சீரான வட்டி விகிதம் என்பது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வங்கிகள் தங்கள் வாராக்கடனை மார்ச் 2017-க்குள் மொத்தமாக வசூல் செய்து விடவும் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார். வாராக்கடன்களிலிருந்து வங்கிகளை விடுவிக்க அவர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வங்கிகள் தரப்பிலிருந்தும் ஆதரவு உள்ளது. 60 பில்லியன் டாலர்கள் அல்லது ரூ.4 லட்சம் கோடிக்கு வாராக்கடனுடன் 2016-ம் ஆண்டில் வங்கிகள் அடியெடுத்து வைத்துள்ளன.
சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் வரையிலான காலாண்டில் மார்ச் 2015-ல் இருந்த 4.6% என்ற செயலற்ற சொத்துகள் மதிப்பு 5.1% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலற்ற சொத்துகளும் வாராக்கடன்களும் பெருகுவதற்குக் காரணம், கார்ப்பரேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அளவுக்கு மீறி கடன் வழங்கியுள்ளதே என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2016-ம் ஆண்டின் தொடக்க மாதங்களிலும் வாராக்கடன் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடிகளுக்கு இடையேயும் வங்கிகள் கடனை திருப்பி அளிக்காத நிறுவனங்கள் பெயர்களை வெளியிட்டது. இதில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ், வின்சோம் டயமண்ட்ஸ், ஸூம் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இத்தகைய வாராக்கடன்களினால் 2015-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் லாபம் 19% குறைந்தது. மாறாக தனியார் துறை வங்கிகள் 15% வளர்ச்சி காட்டியுள்ளது.
மேலும் 3 டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லையெனில் 13% வங்கி மூலதனம் அடிவாங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.
“கார்ப்பரேட் நிறுவனத்துறையின் பலவீனங்கள், நிதி ஒழுங்கமைப்பில் இவர்களது பேலன்ஸ் ஷீட் வலுவற்றதாக இருப்பது இன்னும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று கவர்னர் ரகுராம் ராஜன் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன்கள் மற்றும் வங்கிகளின் பலவீனமான பேலன்ஸ் ஷீட்களால் கவலையுற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், 2017 மார்ச்சுக்குள் வங்கிகள் வாராக்கடன்களை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், வங்கிகள் கடன் தொகை நிலுவையை பங்குகளாக மாற்றுவதற்கும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு சவால்களை வங்கிகள் சந்தித்து மீண்டும் சுறுசுறுப்படையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.