இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்1 பி விசாவை நம்பி இயங்கவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்1 பி விசாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதனால் இந்திய ஐடி துறை பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகின.
இதுதொடர்பாக விஷால் சிக்கா மேலும் கூறியதாவது: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை இறுக பற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சர்வதேச போட்டியை சமாளிக்க முடியும்.
இந்திய ஐடி துறை ஹெச்1 பி விசாவை நம்பியிருப்பது என்று சொல்வது தவறானது. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஆண்டுக்கு 65,000 ஹெச் 1பி விசாக்கள் வழங்கப்பட்டன. பத்து ஆண்டுக்கு 6,50,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்திய ஐடி நிறுவனங்களில் பல லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2 லட்சம் ஊழியர்களும், டிசிஎஸ் நிறுவனத்துக்கு இதைப்போல் இருமடங்கு அதிகமாகவும் உள்ளனர். அதனால் ஹெச்1பி விசாவை மட்டுமே இந்திய ஐடி துறை நம்பியிருக்கிறது என்று கூறுவது தவறு.
கடந்த பத்தாண்டுகளில் ஹெச்1பி விசா சிறப்பான பங்களிப்பை செய்துள்ளது. அதேபோல் இந்த ஐடி நிறுவனங்களும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலைகளை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவது எளிதாக இருந்தது. தற்போது செய்துகொண்டிருக்கும் சர்வதேச டெலிவரி மாடலில் பெரும்பகுதி வேலைகள் ஆட்டோமேஷன் மூலமாகவே நடைபெறுகின்றன. அதனால் இந்திய நிறுவனங்கள் கண்டுபிடிப்புத் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங், வாய்ஸ் இன்டர்பேஸ், சாட் இன்டர்பேஸ், சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நம்முடைய உலகம் முழுவதும் ஆட்டோமேஷனாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சாப்ட்
வேர் பயன்பாடு அதிகரிக்கும். அனைத்துமே செயற்கை நுண்ணறிவால் இயங்கும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க இருக்கிறோம். இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எங்களுடைய முதல் இந்தியானா
போலிஸ் சென்டரை அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறோம். இதற்கு 500 பேரை அடுத்த ஆண்டு பணிக்கு எடுக்க இருக்கிறோம். வரும்காலத்தில் அடுத்த மையங்களையும் தொடங்க இருக்கிறோம்.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய ஐடி துறை ஏற்கெனவே நிறைய பங்களிப்பைச் செய்துள்ளது. இனி வரும் காலங்களிலும் கூடுதலாக பங்களிப்பு இருக்கும். இவ்வாறு விஷால் சிக்கா தெரிவித்தார்.