சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த ஒருங்கிணைப்பு முறையில் பதிவு செய்வது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வசதியும் முடக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2017 வரையா காலத்தில் மொத்தம் 60 லட்சம் வரி செலுத்துவோர் இந்த ஒருங்கிணைப்பில் பதிவு செய்துள்ளனர்.
இதில் பதிவு செய்வதற்கான முறை மே 1-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதி முதல்அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்த ஒருங்கிணைப்பில் தங்களை பதிவுசெய்து கொள்ளாத வர்த்தகர்கள், மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் அனைவரும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக இந்த ஒருங்கிணைப்பு தளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலாகஉள்ள இப்புதிய ஒரு முனைவரி விதிப்பு குறித்த விழிப்புணர்வை வருமான வரித்துறை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ. 1 கோடி செலவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சிடிபிடி ஆணையர்வனஜா எஸ். சர்னா தெரிவித்துள்ளார்.
பெரு நகரங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஓட்டங்களும் நடத்த திட்டமிட்டுள்ளது.