நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். டெல்லியில் நடந்த இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய போது அவர் இதை தெரிவித்தார்.
தற்போதைய பருவமழை நிலவரம், அதனால் ஏற்படும் விவசாய உற்பத்தி, கிராமப்புறங்களில் அதிகரிக்கும் தேவை போன்றவை காரணமாக நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் கருதுவதாக ரங்கராஜன் தெரிவித்தார்.
‘உற்பத்திதுறையிலும் முன்னேற்றம் இருப்பதால் இரண்டாம் பாதியில் தொழில் உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 3 சதவிகிதமாக இருக்கும். மொத்தமாகப் பார்க்கும்போது நாட்டின் மொத்த வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் எடுத்து வரும் பல நடவடிக்கைகளுக்கு நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் அதற்கான சாதமான விளைவுகள் ஏற்படும்’ என்றார்.
அமெரிக்கா பொருளாதார ஊக்குவிப்புகளை குறைக்கும்பட்சத்தில் அதைச் சமாளிப்பதற்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்கா எப்போது ஊக்குவிப்பை நிறுத்தும் என்று தெரியாது, அதனால் அந்த சிக்கலை சமாளிப்பதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டியது அவசியம் என்றார். இருந்தாலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருவது இப்போதைக்கு நல்ல விஷயம். தற்போதைய நிலைமையில் பார்க்கும் போது நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவிகிதத்துக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
நடப்பு நிதியாண்டில் 6.4 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழு தெரிவித்தது.
பின்னர் 5.3 சதவிகித வளர்ச்சிதான் இருக்கும் என்று தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.-பிடிஐ.