முதல் முறையாக கடந்த 10 ஆண்டுகளில் டீசல் நுகர்வு நடப்பு நிதிஆண்டில் குறைந்துள்ளது. மாதந்தோறும் டீசல் விலை ஏற்றப்பட்டது, மின்னுற்பத்தி அதிகரித்தது ஆகியவை காரணமாக டீசல் நுகர்வு குறைந்ததாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) தலைவர் ஆர்.எஸ். புடோலா தெரிவித்தார்.
இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருள்களில் டீசல் பிரதானமானதாகும். டீசல் விற்பனை 2003-04-ம் ஆண்டி லிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக டீசல் உபயோகம் 0.8 சதவீதம் சரிந்து 3.94 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு டீசல் நுகர்வு ஒரு சதவீதம் வரை குறையலாம் என தெரிகிறது. டெல்லியில் நடைபெறும் 3-வது எரிசக்தி மாநாட்டில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
டீசல் நுகர்வு குறைந்ததற்கு மின்னுற்பத்தி அதிகரிப்பே முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனரேட்டர் களுக்குப் பயன் படுத்தப்படும் டீசல் உபயோகம் பெருமளவு குறைந்ததாக அவர் சுட்டிக் காட்டினார். அனைத்துக்கும் மேலாக விலைக் கட்டுப்பாட்டிலிருந்து டீசலை முழுமையாக விலக்கும் நோக்கில் மாதந்தோறும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதுவும் டீசல் உபயோகம் குறைய முக்கியக் காரணம் என்று புடோலா தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை டீசல் லிட்டருக்கு ரூ. 6.62 உயர்த்தப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டில் பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதிலிருந்து பெட்ரோல் நுகர்வு குறைந்தது. ஆனால் டீசல் நுகர்வு குறையவில்லை. ஏனெனில் டீசலுக்கு அதிக மானியம் அளிக்கப்பட்டதால் பெட்ரோலுக்கு மாற்றாக டீசலை பெரும்பாலானோர் உபயோகப்படுத்தியதால் டீசல் நுகர்வு குறையவேயில்லை என்று புடோலா தெரிவித்தார்.
இப்போது உற்பத்தி விலைக்கு நிகராக பெட்ரோல் வெளிச் சந்தையில் விற்கப்படுகிறது. இருப்பினும் டீசல் உற்பத்தி விலையைக் காட்டிலும் லிட்டருக்கு ரூ. 9.99 குறைவாக விற்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான 7 மாத காலத்தில் பெட்ரோல் நுகர்வு 10 சதவீதம் அதிகரித்து 90 லட்சம் டன்னை எட்டியதாக அவர் கூறினார்.
டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ. 9.99-ம், மண்ணெண்ணெய் விற்பனையால் லிட்டருக்கு ரூ. 36.20-ம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த நிதிஆண்டில் டீசல் விற்பனை 6.68 சதவீதம் அதிகரித்து 6.90 கோடி டன்னஆக இருந்தது. 2003-04-ம் நிதி ஆண்டில் டீசல் நுகர்வு 3.70 கோடி டன்னாக இருந்தது.