இந்தியாவில் உள்ள வங்கிகளின் செயல்பாடு ஸ்திரமாக உள்ளதாக மூடி’ஸ் முதலீட்டாளர் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாராக் கடன் வசூல் தொடர் பான நடவடிக்கைகள் மிக மெதுவாக நடைபெற்ற போதிலும் வங்கிகளின் நிதி நிலை அடுத்த 12 மாதம் முதல் 18 மாதம் வரை ஸ்திரமாக இருக்கும் என்று மூடி’ஸ் துணைத் தலைவர் மற்றும் கடன் வழங்கு பிரிவின் அதிகாரி ஸ்ரீகாந்த் வட்லமணி தெரிவித்துள்ளார்.
வங்கிகள் அளித்துள்ள கடன் அளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் வங்கிகளைச் சீரமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மெத்தனமாக நடைபெறுவதாக அவர் கூறினார்.
பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் வங்கிகள் பொதுச் சந்தையில் நுழைவதற்கான மூலதனம் திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அதே சமயம் தனியார் வங்கிகள் பெருமளவு முதலீடு வைத்திருப்பதால் அதிக லாபம் ஈட்டுகின்றன என்று அவர் கூறினார்.
வங்கிகளின் கடன் வழங்கு அளவு எந்த அளவுக்குச் சிறப்பாக உள்ளது என்பது அடுத்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றார்.
ஸ்திரமாக செயல்படுவதற்கு ஏற்ற சூழல், சொத்து நிர்வாக இடர் மற்றும் மூலதனம், நிதி மற்றும் புழக்கம், லாபம் மற்றும் அரசின் ஆதரவு ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வங்கிகளின் எதிர்காலம் ஆராயப்பட்டது.
வங்கிகள் செயல்படுவதற்கான சூழல் ஸ்திரமான பொருளாதாரம் மூலமே சாத்தியமாகும் என்று வட்லமணி கூறினார்.
மூடி’ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீத அளவுக்கு இருக்கும் என கணித்துள்ளது. 2015-ம் ஆண்டு 7.3 சதவீதமாகக் கணித்திருந்தது. வளர்ச்சிக்கு சாதகமாக பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யும் என்பதும் அரசின் முதலீடு அதிகரிப்பும், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் காரணமாக சாத்தியமாகும் என தெரிவித்துள்ளது.
கடன் நிர்வாகம் வங்கிகளுக்கு மிகப் பெரிய பாதக அம்சமாகும். ஆனால் இதனால் ஏற்படும் பாதகம் மிக மெதுவாக நடைபெற வேண்டும். ரிசர்வ் வங்கி தனது அடுத்தடுத்த நிதிக் கொள்கைகளில் அடுத்த ஓராண்டுக்குள் தொடர்ந்து வட்டி விகிதத்தை படிப்படியாகக் குறைத்தால் வங்கிகளின் வட்டி வருமான சராசரி ஸ்திரமடையும். கடனுக்கான வட்டி விகிதம் இன்னமும் அதிகமாகத்தான் உள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளைப் போல அதிக அளவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தனியார் வங்கிகளும் கடன் சுமையால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய வட்லமணி, இவற்றிலும் இதே சூழல் அடுத்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை நீடிக்கும் என்றும் கூறினார்.
வங்கிகளுக்கு பணப் புழக்கம் மிக முக்கிய காரணியாக உள்ளது. சந்தையில் கடன் தேவைக்கேற்ப வங்கிகளில் பணப் புழக்கம் இல்லாதது வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக அமையும் என்று தனது அறிக்கையில் மூடி’ஸ் தெரிவித்துள்ளது.