எல் அண்டி டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு ( ஐபிஓ ) வரும் ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.1,243 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விலையாக ரூ.705 முதல் ரூ. 710 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கில் 10 ரூபாய் தள்ளுபடியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிடைக்கும். ஐபிஓ வெளியிட கடந்த ஏப்ரல் மாதம் செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. கடந்த மே மாதத்தில் இதற்கான அனுமதி கிடைத்தது. கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ், மற்றும் ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓவை கையாளுகின்றன.
கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.6,143 கோடியாக இருந்தது. வரிக்கு பிறகான லாபம் ரூ.922 கோடியாக இருக்கிறது. 258 நிறுவனங்கள் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதில் 49 நிறுவனங்கள் ஃபார்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.