வணிகம்

அந்நிய நேரடி முதலீடு 2 ஆண்டுகளில் 53% அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பிடிஐ

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் சாதகமாக உள்ளதால் அந்நிய நேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

விலைவாசி கட்டுக்குள் இருத்தல், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஆகியன வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முதலீடுகள் அறக்கட்டளைகளுக்கு அளிப்பது போல மேற்கொள்ளப்படுபவை அல்ல. லாபம் கிடைக்கும் என்று அந்நிய முதலீட்டாளர்கள் நம்பினால் மட்டுமே முதலீடு செய்வர் என்று மக்களவையில் கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உருவாக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

கடந்த 2 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பது சாதனை அளவாகும் என்று கேள்வி நேரத்தின்போது குறிப்பிட்டார். அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களின் பயனாக முதலீடு 2015-16-ம் நிதி ஆண்டில் அதிகரித்துள்ளது என்றார்.

விரைவான வளர்ச்சியை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றால் எந்த வெளிநாட்டவரும் இங்கு முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள் என்றார்.

தனியார் துறை நெருக்கடியில் இருக்கும்போது வளர்ச்சியை ஊக்குவிக்க இரண்டு காரணிகள்தான் உள்ளன. ஒன்று அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை மற்றொன்று அந்நிய முதலீடாகும். கொள்கை ரீதியில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீடுகளில் நிலவிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார வளர்ச்சியில் தொடர் கவனம் மற்றும் பேரியல் பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரத் தன்மை உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் வளரும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்றார் ஜேட்லி.

மொத்த மூலதன உருவாக்கத்தில் சேமிப்பின் பங்களிப்பு 96.3 சதவீதமாக உள்ளது நமது பொருளாதாரம் வலுவாக உள்ளதைக் காட்டுவதாக நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவா கூறினார்.

SCROLL FOR NEXT