தொழில் தொடங்க உகந்த நாடு என்ற தலைப்பில் உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தியா 130-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையில், தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்றும், 12 நடைமுறைகளை செய்து 29 நாட்களில் இந்தியாவில் தொழில் தொடங்கி விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2004 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தொழில் தொடங்க 127 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தது நினைகூரத்தக்கது.
தொழில் தொடங்க உகந்த நாடு என்ற தலைப்பில் உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தியா 130-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. புதிய முறைப்படி திருத்தங்களுக்கு பிறகு வெளியிட்ட பட்டியலில் கடந்த வருடம் 134-வது இடத்தில் இருந்தது.
மொத்தம் 189 நாடுகளை ஆய்வுக்கு உள்ளடக்கி தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சீனா 84-வது இடத்தில் உள்ளது.
எளிதாக தொழில் தொடங்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலை மொத்தம் பத்து காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர். சில சமயங்களில் நாட்டிற்கு வரும் அந்நிய முதலீடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தொழில் புரிவதற்கு ஆய்வு செய்யப்பட்ட காரணிகள் அடிப்படையில், இந்தியா தொழில் தொடங்குவதில் 155-வது இடமும், கட்டுமான அனுமதியில் 183-வது இடமும், மின்சாரம் வழங்குவதில் 70-வது இடமும், சொத்துகளை பதிவு செய்வதில் 138-வது இடமும், சிறுபாண்மை முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் 8-வது இடமும், வரியை செலுத்துவதில் 157-வது இடமும் வகிக்கிறது.
கட்டுமானத்திற்கு அனுமதி வழங்குவது மற்றும் மின்சாரம் வழங்குவதிலும் இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.