வணிகம்

பிட்காயின் போன்ற மெய்நிகர் பணம் உபயோகிப்பாளர் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?- ஆர்பிஐ துணை கவர்னர் காந்தி கேள்வி

பிடிஐ

பிட்காயின் போன்ற மெய்நிகர் பண (Virtual Currency) பரிவர்த்தனை சட்ட ரீதியாகவும், நிதி பரிவர்த்தனை ரீதியாகவும் மிகவும் சிக்கலானது. அதை நிர்வகிக்க போதிய கண்காணிப்பு ஆணையம் உருவாக்கப்படாத நிலையில் இத்தகைய பரிவர்த்

தனை உபயோகிப்பாளர் மற்றும் பரிவர்த்தனை செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியன் வங்கிகள் சங்கம், நாஸ்காம், ஃபிக்கி மற்றும் ஃபின்டெக் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

டிஜிட்டல் கரன்சிகளை அதிக அளவிலான மக்கள் இப்போது பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஆனால் இத்தகைய கரன்சிகளைக்கண்காணிக்க எவ்வித ஆணையமும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இது நிதி, பரிவர்த்தனை, சட்ட ரீதியிலான பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு யாரை பொறுப்பாக்க முடியும்.

மெய்நிகர் பணமானது டிஜிட்டல் கரன்சியாக பாதுகாக்கப்படுகிறது. இதை எவரேனும் ஹாக் செய்தாலோ அல்லது சங்கேத எண் தொலைந்து போனாலோ அல்லது மால்வேர் போன்ற சைபர் தாக்குதலாலோ பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர், அதாவது இத்தகைய கரன்சியை பயன்படுத்தும் நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு இதில் தீர்வுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதற்கான நடைமுறையும் இதுவரையில் இல்லை.

பொதுவாக இதுபோன்ற கரன்சிகள் சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

மெய்நிகர் பணத்தைப் பொருத்தமட்டில் இரண்டு விஷயம்தான்; அதிலுள்ள நம்பகத்தன்மை, அதன் ஆதாரம் எவரும் அறியாதது. இந்த இரண்டு விஷயங்களும் தெளிவில்லாத நிலையில் இத்தகைய பரிவர்த்தனை நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று காந்தி சுட்டிக் காட்டினார்.

நம்பகத் தன்மையோ அல்லது அதன் மூலாதாரம் இவற்றில் ஏதேனும் ஒன்று கேள்விக்குறியாகும்போது இது முற்றிலுமாக காணாமல் போகும் என்றார்.

பிட்காயின் அல்லது பிளாக் செயின் மூலமான பரிவர்த்தனை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே நிகழ முடியும். இந்த வட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே துணிந்து முடிவு எடுப்பவர்களாகவும், அதன் விளைவுகள் எப்படியிருப்பினும் அதை ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருப்பர். இந்த வட்டம் பெருமளவிலான மக்களிடம் செல்லும்போது, துணிந்து முடிவு எடுக்க விரும்பாதவர்களும் இதில் வருவர். அப்போது அவர்களுக்கு நம்பகத்தன்மை தேவைப்படும். அதை ஏற்பதா என்றும் அதில் தொடர்வதா என்றும் கேள்வி எழும் என்று காந்தி குறிப்பிட்டார்.

ஏதாவது ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு அதற்கு உத்தரவாதம் (சான்று) அளிக்கும்போதுதான் அதன் மீதான நம்பகத் தன்மை உருவாகும். அத்தகைய சூழல் இல்லாமல் பிளாக் செயின் இணைப்பு மூலம் மெய்நிகர் பண பரிவர்த்தனை என்பது சாத்தியமில்லாததே என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT