பொதுத்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசியின் துணை நிறுவனமான ஓஎன்ஜிசி விதேஷ் (ஓவிஎல்) ரூ.6,100 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என சேவை வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு திட்டங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முதலீடுகளுக்காக இந்த வரியை விதித்துள்ளது. ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் 17 நாடுகளில் 37 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை வைத்துள்ளது.
வெளிநாட்டில் தொழில் பிரிவுகளில் முதலீடுகளை மேற்கொண்டதற்காக அந்த நிறுவனங்கள் ஓவிஎல் நிறுவனத்துக்கு சேவை வரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது சேவை வரித் துறையின் வாதமாக இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
முதல் முறையாக கடந்த 2011-ம் |ஆண்டு அக்டோபர் மாதம் ஓவிஎல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் ரூ.2,816.31 கோடி சேவை வரி, வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த தொகை 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், 2010ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை அடிப்படையில் சேவை வரித்துறை மதிப்பிட்டுள்ளது
இதற்கு பிறகு மேலும் ஐந்து விளக்கம் கோரும் நோட்டீஸ்களையும் சேவை வரி கட்டச் சொல்லியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக மார்ச் 31, 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு சேர்த்து ரூ.3,286.36 கோடி சேவை வரி, வட்டி மற்றும் அபராதத்தை கட்ட வேண்டும். ஆனால் ஓவிஎல் நிறுவனம் இந்த சேவை வரியை செலுத்தப்போவதில்லை என்றும் சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. வெளிநாட்டில் துணை நிறுவனங்கள் மூலம் செய்துள்ள முதலீடுகளில் எந்தவிதமான சேவையையும் பெறவில்லை என்று ஓவிஎல் கூறியிருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் (2015-16) ரூ.2,903 கோடி அளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டமடைந்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2014-15) ரூ.1,904 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.