இந்தியாவின் 75வது சுதந்திர தினத்துக்குள் (2022-ம் ஆண்டு) நாட்டிலுள்ள 95 சதவீத வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் 30-வது ஆண்டுவிழா, தேசிய அளவிலான மாநாடு மற்றும் கண்காட்சி ஆகியவை கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றன.
இதில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
சமையல் எரிவாயு விநியோகத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு சுமார் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. இருப்பினும், வாஜ்பாய் தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகுதான், எளிய மக்களிடம் சமையல் எரிவாயு சேவை கொண்டு செல்லப்பட்டது. அந்த நடவடிக்கையால் விவாதங்கள் உருவானது. ஆனால் கிராமப்புற பெண்களின் நலனுக்காகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, தற்போது நரேந்திரமோடி தலைமையிலான அரசு, ஏழை, எளிய, கிராமப்புற பெண்கள், பழங்குடி மக்களும் சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்த வேண்டும், புகையில்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
20 கோடி பயனாளிகள்
பாஜக அரசு ஆட்சியமைப்பதற்கு முன்பாக 13 கோடி மக்கள் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றிருந்தார்கள். அரசின் தீவிர முயற்சியால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 20 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 27 கோடியாக உயரும். 2022-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 95 சதவீதம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். அதற்கு விநியோகஸ்தர்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பயணத்துக்காக, ஆலோ சனைகளையும், புகார்களையும் நேரடியாகவோ, சமூகவலைத் தளங்கள், இமெயில் மூலமாகவோ எனக்குத் தெரிவிக்கலாம்.
மத்திய அரசின் முயற்சியால், சமையல் எரிவாயு மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமா னோர் தங்களது எரிவாயு இணைப்பை திரும்ப வழங்கியுள் ளனர். இத்திட்டங்கள் வெற்றியடைய மக்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் உள்ள ஒத்துழைப்பே காரணம்.
அடுத்தகட்டமாக, அடுப்பு புகை யில்லா கிராமங்களையும், மின்னணு பணப் பரிவர்த்தனை யையும் நோக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அதில் முதல்கட்டமாக மின்னணு முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்தால் கட்டணத்தில் ரூ.5 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மின்னணு முறையில் சிலிண்டர்கள் பதிவு செய்வோரின் எண்ணிக்கை சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
எல்பிஜி விநியோகஸ்தர்களும் தங்களது சேவையை விரிவுபடுத்தினால் மட்டும் அரசின் திட்டங்கள் மக்களிடம் எளிதில் சென்றடையும். எரிவாயு உருளைகளில் உள்ள கசிவுகளை சரிசெய்வதற்கான செப்டிக் கிளினிக்கை ஏற்படுத்த வேண்டும். காப்பீடு வசதி குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாளொன்றுக்கு 200 கோடி சிலிண்டர்கள் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுக்கான கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த மக்களுக்கு அறிவுறுத்தி உதவ வேண்டும் என்றார்.
முன்னதாக, மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த எல்பிஜி சமையல் எரிவாயு சேவைகள் குறித்த கண்காட்சியை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.