வணிகம்

உற்பத்தி வரி குறைப்பால் பங்குச் சந்தைகளில் எழுச்சி

செய்திப்பிரிவு

மத்திய அரசு திங்கள்கிழமை இடைக்கால பட்ஜெட் அறிவித்த நிலையில் பங்குச் சந்தையில் 97 புள்ளிகள் உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் பங்குச் சந்தையில் அதிகபட்ச அளவுக்கு புள்ளிகள் உயர்ந்தது இதுவே முதல் முறை. ஆட்டோமொபைல் துறை, மூலதன பொருள்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு உற்பத்தி வரிச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் 25 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6073 ஆக உயர்ந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 173 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதேபோல திங்களன்று வர்த்தகத்தில் புள்ளிகள் உயர்ந்து 20464 என்ற நிலையை எட்டியது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பங்குச் சந்தை குறியீட்டெண் 20513 என்ற நிலையை எட்டியது. அதற்குப் பிறகு இப்போதுதான் அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளது.

டாடா பவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.

முக்கியமான 12 துறைகளில் 7 துறைகளின் பங்குகள் ஏற்றம் பெற்றன. வங்கித்துறை, எரிசக்தி, ஆட்டோமொபைல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றம் பெற்றன. அதேசமயம் ரியல் எஸ்டேட், உலோகம் துறை சார்ந்த பங்குகளை அதிகம் வாங்கும் போக்கு காணப்பட்டது.

பொருளாதார தேக்க நிலை காரணமாக மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உற்பத்தி வரி குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சலுகை உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஏஞ்சல் புரோக்கிங் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தினேஷ் தக்கார் தெரிவித்தார்.

உற்பத்தி வரி குறைப்பு காரணமாக வாகனக் கடன் வழங்கும் தனியார் வங்கிகளின் கடன் வழங்கும் அளவும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மிகப் பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு எதையும் சிதம்பர வெளியிடாதது அவரது திறமையைக் காட்டுகிறது. தேக்க நிலையில் உள்ள துறைகளை ஊக்குவிக்க அவர் அளித்த சலுகை வரவேற்கத்தக்கது என்று ஐசிஆர்ஏ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நரேஷ் தக்கார் தெரிவித்தார்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறாததால் ஜூவல்லரி சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.

டாடா பவர் பங்கு விலை 4.81%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.83%, டாக்டர் ரெட்டீஸ் 2.45%, ஐசிஐசிஐ வங்கி 2.13%, ஹீரோ மோட்டோ கார்ப் 1.99%, மாருதி சுஸுகி 1.38%, ஹெச்டிஎப்சி 1.37%, ஹெச்டிஎப்சி 1.15%, ஆக்ஸிஸ் வங்கி 1.15%, என்டிபிசி 1.10% ஆகிய நிறுவன பங்கு விலைகள் உயர்ந்தன.

கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலை 1.59%, ஹிண்டால்கோ 1.35%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.22% அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.

மொத்தம் 1,373 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,235 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 157 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மொத்தம் ரூ. 1,524 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT