வணிகம்

காலாண்டு முடிவுகள்: ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 43% சரிவு

செய்திப்பிரிவு

ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 43% சரிவு

ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 43% சரிந்து ரூ.1,225 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,154 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.13,592 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,181 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.67 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 5.04 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.70 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இதனால் வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,168 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.2,581 கோடியாக இருக்கிறது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 55 சதவீதம் சரிந்து ரூ.3,969 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.8,223 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் ரூ.50,359 கோடியில் இருந்து ரூ.56,233 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒரு பங்குக்கு 5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.15% உயர்ந்து ஆக்ஸிஸ் வங்கி பங்கின் வர்த்தகம் முடிந்தது.

எல்விபி நிகர லாபம் 6% உயர்வு

தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்ந்து ரூ.52 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.49 கோடியாக நிகர லாபம் இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.758 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.97 சதவீதத்தில் இருந்து 2.67 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே போல வங்கியின் நிகர வாராக்கடன் 1.18 சதவீதத்தில் இருந்து ரூ.1.76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.27 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை இப்போது 108 கோடியாக அதிகரித்திருக்கிறது.

ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.180 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.256 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானமும் 16.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.3,349 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒரு பங்குக்கு 2.70 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT