வணிகம்

ஹைக் மெசஞ்சர் 17.5 கோடி டாலர் நிதி திரட்டல்: டென்சென்ட், பாக்ஸ்கான் நிறுவனங்கள் முதலீடு

பிடிஐ

குறுஞ்செய்தி சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான ஹைக் 17.5 கோடி டாலர் நிதி திரட்டி இருக்கிறது. பாக்ஸ்கான் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் இம்முறை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுக்கு பிறகு நிறுவனத்தின் மதிப்பு 140 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களான டைகர் குளோபல், பார்தி மற்றும் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் இந்த முறையும் முதலீடு செய்துள்ளன.

ஹைக் மெசஞ்சர் நான்காவது முறையாக இப்போது நிதி திரட்டியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டலின் மகன் கவின் பார்தி மிட்டல் உருவாக்கியுள்ள நிறுவனம் ஹைக் ஆகும்.

இதுவரை 25 கோடி டாலர் முதலீட்டை பெற்றுள்ளது. இந்த நிதி சேவைகள், மக்கள், அலுவலகம் உள்ளிட்ட நீண்ட கால விஷயங்களில் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் கவின் பார்தி மிட்டல் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: நிறுவனம் தொடங்கப்பட்டு 3 வருடங்கள் மட்டுமே முடிந் திருக்கிறது. நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு வர 8 வருடங்கள் ஆகும். அதனால் இப்போதைக்கு பொதுப்பங்கு வெளியிடும் திட்டம் இல்லை. அதேபோல் அப்பாவின் நிறுவனமான பார்தி ஏர்டெல்லில் இணை வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த திட்டம் இருந்தால் சில வருடங்களுக்கு முன்பே இணைந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தது. இப்போது இந்த பாதையை தேர்ந்தெடுத்துவிட்டேன். இப் போது இந்த தொழிலை மேம் படுத்தும் திட்டத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பகட்டத்தில் பார்தி சாப்ட்பேங்க் முதலீடு செய்தது. ஆகஸ்ட் 2014-ம் ஆண்டு டைகர் குளோபல் முதலீடு செய்தது. இப்போதைக்கு இந்த செயலியை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு மாதத்துக்கு 4,000 குறுந்தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின் றன.

SCROLL FOR NEXT