காக்ஸ் அண்ட் கிங்கிஸ் நிகர லாபம் 78 சதவிகிதம் உயர்வு
சுற்றுலாத் துறையில் செயல்பட்டுவரும் காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 78 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் ரூ. 147.59 கோடியாக இருந்த லாபம் இப்போது ரூ. 263.73 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிகர விற்பனையும் அதிகரித்திருக் கிறது. கடந்தவருட செப்டமப்ரில் 688.92 கோடியாக இருந்த விற்பனை இப்போது 818.81 கோடியாக அதிகரித்திருக்கிறது. எங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்பவே முடிவுகள் வந்திருப்பதாக, காக்ஸ் அண்ட் கிங்ஸின் இயக்குனர் பீட்டர் கேர்கர் தெரிவித்தார். மேலும், இந்திய மற்றும் வெளிநாட்டு சூழ்நிலை சாதகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நான்கு கண்டங்களில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வர்த்தகத்தின் முடிவில் 8 சதவிகிதம் உயர்ந்து 99.50 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.
நாட்கோ பார்மா நிகர லாபம் 28 சதவிகிதம் உயர்வு
மருந்துத்துறை நிறுவனமான நாட்கோ பார்மாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ.20.99 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.27 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆனால் நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த வருட செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது சரிந்தே இருக்கிறது.
கடந்த செப்டம்பரில் ரூ.169.16 கோடியாக இருந்த நிகர விற்பனை, இப்போது சிறிதளவு சரிந்து ரூ.162.91 கோடியாக இருக்கிறது.
வர்த்தகத்தின் முடிவில் நான்கு சதவிகிதம் அளவுக்கு சரிந்து 792 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஆனால் வர்த்தகத்தின் இடையே தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 826 ரூபாயை இந்த பங்கு தொட்டது.
டாடா பவர் நிகர லாபம் ரூ.74.97 கோடி
தனியார் நிறுவனங்களில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டாடா பவர் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.74.97 கோடியாக இருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.83.80 கோடியை நஷ்டமாக சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் அனைத்து யூனிட்களும் செயல்பட ஆரம்பித்திருப்பதால், மொத்த வருமானம் 14 சதவிகித அளவுக்கு அதிகரித்து ரூ. 8,764.69 கோடியாக இருக்கிறது. முந்த்ரா மற்றும் மைதூன் ஆலைகள் செயல்படத் தொடங்கியுள்ளதால் முழுவீச்சில் மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
முந்த்ரா ஆலை செயல்பாட்டுக்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தகத்தின் முடிவில் ஒரு சதவிகிதம் அதிகரித்து 78.70 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்.டி.ஐ.எல். நிகரலாபம் 70 சதவிகிதம் சரிவு
ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 70 சதவிகிதம் சரிந்து ரூ. 42.70 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.140.55 கோடியாக இருந்த்து.
ஆனால் அதே சமயம் நிறுவனத்தின் வருமானம் 66 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ. 267.24 கோடியாக இருந்த வருமானம் இப்போது 443.90 கோடியாக அதிகரித்திருக்கிறது.
வருமானம் அதிகரித்தும் லாபம் குறைந்தற்கு, இந்த காலாண்டில் ஏற்பட்ட செலவுகள்தான். கடந்த செப்டம்பரில் ரூ. 52.05 கோடியாக இருந்து இப்போது ரூ.186.63 கோடியாக செலவுகள் அதிகரித்திருக்கிறது.
இந்த நிறுவனம் 10 கோடி சதுர அடியிலான ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 4 சதவிகிதம் அதிகரித்து 43.35 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
பாம்பே டையிங் நிகர நஷ்டம் ரூ. 62 கோடி
பாம்மே டையிங் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 62 கோடி ரூபாய் நஷ்டம அடைந்திருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டிலும் இந்த நிறுவனம் நஷ்டமே அடைந்தது. ஆனால் கடந்த வருட நஷ்டத்தை விட இப்போது நஷ்டம் அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ.27.74 கோடி ரூபாய் நஷ்டமடைந்தது. அதே சமயம், நிகர விற்பனை கடந்த வருட செப்டம்பர் காலாண்டை விட சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.494.22 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.494.55 கோடியாக உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 89.76 கோடி ரூபாய் இந்த நிறுவனம் நஷ்ட மடைந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 55.24 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டமடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 3 சதவிகிதம் சரிந்து 66.45 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.