ஏப்ரல் 1 முதல் பிஎஸ் III வாக னங்களை விற்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்கிறோம். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிஎஸ் IV ரக வாகனங்களை கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஆனால் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதனால் பிஎஸ் III வாகனங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக விற்றுவருகிறோம் என சியாம் தலைவர் வினோத் தாசரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தின் அறிவிப்பின்படி பிஎஸ் III ரக வாகனங்கள் ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் விற்க தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது உச்ச நீதிமன்றம் தடை செய்திருப்பது விரக்தியளிக்கிறது. பிஎஸ் IV வாகனங்களுக்கு ஏற்ற எரிபொருள் இல்லாததுதான் பிரச்சினை. எங்கள் (அசோக் லேலாண்ட்) நிறுவனத்தை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் பிஎஸ் III வாகனங்கள் இல்லை என்றார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கூறும்போது, சில விஷயங் களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது. இது நமது குழந்தை களின் எதிர்காலம். அரசு அறிவிக் கையில் உற்பத்தி மட்டுமே செய் யக்கூடாது என குறிப்பிட்டிருக் கிறது. ஆனால் எழுதப்படாததை யும் நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சர்வதேச தரத்துக்கு உயர வேண்டும் என்றால் பிஎஸ் IV நோக்கியே செல்ல வேண்டும். இது மட்டுமே ஒரே வழி. பிஎஸ் III வாகனங்களின் உற்பத்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே டொயோடா நிறுவனம் நிறுத்திவிட்டது. தற்போது இந்தியாவில் விற்கும் அனைத்து வாகனங்களும் பிஎஸ் IV தகுதிசான்று பெற்ற வாகனங்கள் என டொயோடா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறினார்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பதாகவும், எங்களுடைய அனைத்து வாகனங்களும் விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் பாதிக்கப்படாத நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று. இந்த நிறுவனம் 2010-ம் ஆண்டு முதல் பிஎஸ் IV ரக வாகனங்களை விற்று வருகிறது.
இந்த உத்தரவால் ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய், பஜாஜ், டொயோடா ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்படாததால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவான கருத்தினை தெரிவித்திருக்கின்றன.