வணிகம்

பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு; 30,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் சாதகமான சூழல் நிலவுவது மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 30,133 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே இதுவரை இல்லாத அளவுக்கு 30,167 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இருந்த புள்ளியை விட உயர்ந்திருக்கிறது.

அதேபோல நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 9,351 புள்ளியில் முடி வடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,367 புள்ளியை நிப்டி தொட்டது. துறைவாரியாக பார்க்கும் போது எப்எம்சிஜி துறை 2.04 சதவீதம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோ துறை குறியீடு 1.01 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வங்கி குறியீடு 0.82 சதவீதம் மற்றும் உலோகத்துறை குறியீடு 0.47 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. மாறாக ரியால்டி குறியீடு 2.95 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ஐடி குறியீடு 1.08 சதவீதம், ஆயில் அண்ட் கேஸ் 1.02 சதவீதம் மற்றும் கட்டுமான குறியீடு 0.92 சதவீதம் சரிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில் ஐடிசி (3.36%), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (3.29%), ஹெச்டிஎப்சி (2.36%), ஹெச்யூஎல் (1.78%) மற்றும் ஐசிஐசிஐ வங்கிப்பங்கு 1.61 சதவீதம் உயர்ந்து முடிந்தன. மாறாக அதானி போர்ட்ஸ் (-2.31%), இன்போசிஸ் (-1.61%), டாக்டர் ரெட்டீஸ் (-1.31%), பவர் கிரிட் (-1.30%) மற்றும் ரிலையன்ஸ் பங்கு 1.13 சதவீதம் சரிந்து முடிந்தன.

சர்வதேச அளவில் சாதகமான சூழல் இருப்பதால் சந்தையில் ஏற்றம் இருந்ததாக எஸ்எம்சி குளோபல் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சௌரப் ஜெயின் தெரிவித்தார்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர் கள் 1,600 கோடி டாலர் இந்திய சந்தையில் இதுவரை முதலீடு செய்திருக்கின்றனர். அதேபோல சிறு முதலீட்டாளர்களும் மியூச்சுவல் பண்ட் மூலமாக தொடர்ந்து முத லீடு செய்து வருகின்றனர். நடப் பாண்டில் இதுவரை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 115 கோடி டாலர் முதலீடு செய்திருக்கின்றன.

சென்செக்ஸ் 13% உயர்வு

நடப்பாண்டில் இதுவரை சென்செக்ஸ் 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதே போல நிப்டி இந்த ஆண்டில் 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 30-ம் தேதி 26,622 புள்ளியில் இருந்த சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 30,133 புள்ளியில் முடிந்திருக்கிறது. ஆனால் உலகின் மற்ற முக்கியமான சந்தைகளில் பெரிய ஏற்றம் இல்லை. இந்திய சந்தைகளுக்கு அடுத்து ஜெர்மனியின் டாக்ஸ் குறியீடு நடப்பாண்டில் 8.59 சதவீதமும், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 6 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.

ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 64.26 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக ஒரு டாலர் 63.93 ரூபாயாக இருக்கிறது.

செவ்வாய்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 64.26 ரூபாயாக இருந்தது. நேற்று வர்த்தகம் தொடங்கிய சமயத்தில் 9 பைசா உயர்ந்து 64.17 ரூபாயாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து 64.11 ரூபாயில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT