ஏற்கெனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் பான் எண் உடையவர்கள் இரண்டையும் இணைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, ஆதார் எண்ணையும், நிரந்தர கணக்கு எண்ணையும் இணைப்பது செல்லுபடியாகும் என்று கூறியதோடு, ஆதார் அட்டை தற்போது இல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது, அதாவது, தனியுரிமைக் கொள்கையை மீறுவதாக இருக்கிறதா ஆதார் எண் என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை ஆதார் கட்டாயம் என்பதிலிருந்து ஆதார் இல்லாதவர்களுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், வருமான வரிச்சட்டம் 139ஏஏ-யின் படி ஜூலை 1ம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே உள்ள பான் எண் தொடர்ந்து செல்லுபடியாக ஆதார் அட்டை அவசியமாகும். தற்போது இதற்கு உச்ச நீதிமன்றம் ‘பகுதியளவில் தடை’ விதித்துள்ளது.
நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வருமான வரிச்சட்டம் 139ஏஏ பிரிவின் கீழ் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இதே பிரிவின் கீழ் விலக்கு அளித்துள்ளது.
இதனையடுத்து 139ஏஏ பிரிவை அடக்கி வாசிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள், பான் எண்ணை செல்லாது என்று கூறுவதும்,வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களை கட்டுப்படுத்துவதும், ‘மிகக் கடுமையான விளைவுகளை’ ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.
அதாவது சுருக்கமாக, ஆதார் அட்டை இல்லாதவர்களும், ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களும் தொடர்ந்து தங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யலாம். இவர்களது நிரந்தர கணக்கு எண் (பான்) தொடர்ந்து செல்லும், அதாவது ஆதார் எண் என்பது தனியுரிமை கொள்கையை மீறுவதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை இவர்களது பான் எண் செல்லும், இவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
ஆதார் அட்டை தனியுரிமைக் கொள்கையை மீறுகிறதா என்பது குறித்த வழக்கு 2015-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது, இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.