வணிகம்

வங்கிக் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள் பட்டியலைத் தயாரிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் மிகப் பெரும் சுமையாக இருப்பது வாராக் கடன்தான். இந்தப் பளுவைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) தீவிரமாக உள்ளன.

வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்துவதற்கு போதிய நிதி ஆதாரம் இருந்தும் அதை செலுத்தாமல் உள்ள தொழிலதிபர்கள் பட்டியலைத் தயாரிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த ஒருமுறை செலுத்தும் வசதியை (ஒடிஎஸ்) ஏற்க விரும்பும் தொழில்துறையினர் பட்டியலையும் தனியாக தயாரிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த ஒருமுறை தீர்வு முறையை ஒரு மேலாண் குழு கண் காணிப்பின் கீழ் நடத்தவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் வங்கிகளுக்கு ஏதேனும் சிக்கல் நேரிடுவதைத் தவிர்க்கலாம் என அரசு கருதுகிறது.

வேண்டுமென்றே பணத்தை திரும்ப செலுத்தாதவர்களால், பல்வேறு காரணங் களால் உண்மையிலேயே தொழில் நலி வடைந்த நிறுவன அதிபர்களும் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அத்தகையோரின் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுகிறது. இத்தகைய தொழில் துறையினருக்கு மறு உதவி கடன் வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போரன்சிக் ஆடிட்

கடன் பெற்று திருப்பித் தராத தொழிலதிபர்களின் சொத்து விவரத்தை தணிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஃபோரன்சிக் ஆடிட் எனப்படும் இத்தகைய தணிக்கை முறை யில் தொழிலதிபர் வங்கியில் பெற்ற கடனுக்கு ஈடாக அவர்கள் அளித்த சொத்துகள் மற்றும் தொழிலதிபர்களின் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தனியார் தணிக்கை நிறுவனங்கள் மூலம் விவரங் கள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி அதிகாரி களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு காலக் கெடுவுடன் கூடிய தீர்வை காணுமாறு வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாராக் கடன் வங்கி

வங்கிகளின் வாராக் கடன் தொகை முழுவதையும் ஏற்பதற்காக வாராக் கடன் வங்கியை (Bad Bank) உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. வங்கிகளின் வாராக் கடன் தொகை முழுவதும் இந்த வங்கிக்கு மாற்றப்படும். இதை வசூலிக்க ஏதுவாக பொதுத்துறை வங்கிகள் ஃபோரன்சிக் தணிக்கை நடத்தி கண்டறிந்த 50 தொழிலதிபர்கள் பட்டியலில் உள்ளவர்களிடமிருந்து வசூலிக்கும் நடவடிக்கையை இந்த வங்கி தொடரும்.

இந்த வங்கிக்கு எத்தகைய அதிகாரங் களை அளிப்பது என்பது குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு நிதி சேவை துறை அறிவுறுத்தப்பட் டுள்ளது.

ஏற்கெனவே தனியாரால் நிர்வகிக்கப்படும் சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்களுக்கு உள்ள அதிகாரங்கள் போதுமா? அல்லது கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வேண்டுமா என்பதை தங்கள் அறிக்கையில் குறிப்பிடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

ஏலம் நடத்த முடிவு

வங்கிகளில் ஈடாக வைத்துள்ள சொத்துகள் அனைத்தையும் ஏலம் விடவும் அரசு முடிவு செய்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்த ஏலத்தை நடத்தி கடன் சுமையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

2016-17-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் வங்கி களின் வாராக் கடன் அளவு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. மொத்த வாரக் கடன் அளவு ரூ. 6.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2015-16-ம் நிதி ஆண்டில் இது ரூ. 5.02 லட்சம் கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதி ஆண்டில் வாராக் கடன் அளவு ரூ. 2.67 லட்சம் கோடியாக உள்ளது.

வங்கிகளின் வாராக் கடன் சுமையைக் குறைப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை வங்கியும், அரசும் நன்கு உணர்ந்துள்ளது. இதை நிவர்த்தி செய்வதன்மூலம்தான் முத லீட்டுச் சூழலை ஏற்படுத்த முடியும் என்பதிலும் அரசு தெளிவாக உள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில், வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினை மிகவும் சவாலாக உள்ளது என்றும் பல்வேறு குழுக்களின் உதவியோடு இதற்கு தீர்வு காண அரசு முயற்சிப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

வாராக் கடன் அதிகரிப்பில் உருக்கு, மின்சாரம், ஜவுளி மற்றும் கட்டமைப்புத்துறைகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் வாராக் கடன் பெற்று திரும்ப செலுத்தாத வசதி படைத்த வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக் கலாம் என்ற ஆலோசனையும் முன் வைக்கப்பட்டது. வாராக் கடன் தொகையை சமாளிக்க சிறப்பு வங்கி தொடங்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

தலைவர்களை மாற்ற முடிவு

ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட சில பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த அதன் தலைவர்களை மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. நிர்வாக இயக்குநர் நிலையிலான பொறுப்பில் உள்ளவர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் வேறு வங்கிக்கு மாற்றப் படலாம் என தெரிகிறது. இதுகுறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான குழு எடுக்கும் என்று தெரிகிறது.

போரன்சிக் தணிக்கை என்றால் என்ன?

தனி நபர் அல்லது நிறுவனத்தின் நிதி நிலை குறித்த விவரத்தை ஆய்வு செய்வது. கடன் தொகையை வேறு பணிகளுக்கு திருப்பி விடப்பட்டதா அல்லது வேறு தொழிலில் முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும்.

பொதுவாக பெரிய அளவிலான கடன் தொகை வழங்கும்போது இத்தகைய தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல நலிவடைந்த நிறுவனத்தை சீரமைக்க மறு கடன் உதவி அளிக்கும்போது இத்தகைய தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

வழக்கமான தணிக்கை செய்யும் சார்டர்ட் அக்கவுன்டன்ட்களால் இத்தகைய ஃபோரன்சிக் தணிக்கையை மேற்கொள்ள முடியாது. இதற்கென்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளை முடித்துள்ள தணிக்கையாளர்கள்தான் இதைச் செய்ய முடியும். குற்றம் புரிவோரின் உளவியல் தன்மை, குற்ற சட்டங்கள் இதை ஆராய்வதற்கான வழிமுறைகள் ஆகியன பற்றி இந்த வகுப்புகளில் கற்றுத் தரப்படும். எந்தெந்த வழிகளில் தவறுகள் புரிந்திருக்கக் கூடும் என்பதும், எத்தகைய வழிகளில் அவர்கள் தப்பிக்கக் கூடும் என்பது குறித்த விவரமான படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இத்தகைய ஃபோரன்சிக் தணிக்கையை மேற்கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT