வணிகம்

ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஏமாற்று நிறுவனங்களை ஒழிக்கலாம்

செய்திப்பிரிவு

பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி), சட்டத்துறை, அமலாக்கல் துறை ஆகிய பிரிவுகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தவறான பொதுமக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளித்து ஓடி விடும் நிறுவனங்களை ஒழிக்க முடியும் என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா கூறினார்.

மாவட்ட அளவில், மாநில அளவில் அடுத்து பங்குச் சந்தை அளவில் ஒருங்கிணைப்பு இல்லாததே இதுபோன்ற நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து அதிக அளவு நிதி திரட்டுகின்றன. மாநிலங்களில் இதுபோல அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி நிதி திரட்டும் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைக்கின்றன.

பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் மூலம் நிதி திரட்டி ஓடிப்போன நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகம். இவற்றில் சிலவற்றை மட்டும் செபி கண்டுபிடித்துள்ளது. இப்போது செபி-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

மாநிலங்களிடையே ஒருங்கிணைப்பு இருந்தால் இதுபோல நிறுவனங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒழிக்கலாம். இதன் மூலம் மக்களிடையே திரட்டும் நிதி அளவு மிக அதிக அளவு ஆகாமல் தடுக்க முடியும். இந்த விஷயத்தில் மாநில அரசு, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இதுபோல தவறு செய்யும் நிறுவனங்களைப் பிடிக்க முடியும்.

இப்போதுதான் இத்தகைய புலனாய்வு அமைப்புகளுடன் செபி-யின் ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளது. கீழ் நிலையில் உள்ள மக்கள் ஏமாறுவதைத் தடுக்க இந்த ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது என்று சின்ஹா கூறினார்.

மாநிலங்களிடையே உள்ள புலனாய்வு மற்றும ஒழுங்குமுறை அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், அசாம் ஆகிய மாநிலங்களில் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான மோசடி நிதி நிறுவனங்கள் உருவாகி மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாநில புலனாய்வு அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்த செபி நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்ற மோசடி நிறுவனங்கள் குறித்து தகவல் கிடைத்தால் அது பற்றி செபி-க்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த பணியை ஊடகங்களும் செய்யலாம். உடனே இது குறித்து செபி விசாரணை மேற்கொள்ளும் என்றார்.

மக்களிடம் நிதி திரட்டும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், மாநில அளவில் புலனாய்வு உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இருந்தால் இதுபோன்ற மோசடி நிறுவனங்ளை ஒழித்துவிடலாம். இப்போது வாய்மொழி உத்தரவாக உள்ளது செயலாக்கம் பெறும்போது அது உரிய பலனைத் தரும் என்று சின்ஹா கூறினார்.

SCROLL FOR NEXT