வணிகம்

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உயரும்: இந்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்

பிடிஐ

தற்போதைய விலை நிலவரப்படி 2016-17-ம் நிதியாண்டில் இந்தியா வின் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் தனிநபர் வருமானம் 93,293 ரூபாயாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`2016-17 நிதியாண்டிற்கான தேசிய வருமானம் கணிப்பு’ அறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட் டுள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1,03,007 ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த வருட தனிநபர் வருமானத்தை விட இது 10.4 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் உண்மையான புள்ளிவிபரத்தின்படி (2011-12 விலை நிலவரப்படி) 2015-16-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ. 77,435 ஆக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ. 81,805 ஆக உயரும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலையான விலை நிலவரப்படி தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் இந்த நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 6.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.6 சதவீதத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டில் உற்பத்தி துறை, சுரங்கத் தொழில், கட்டிடத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சி குறைந்ததால் ஜிடிபி 7.1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படு வதாக மத்திய புள்ளியியல் அலுவல கம் தெரிவித்துள்ளது. மேலும் பண மதிப்பு நீக்கத்தின் விளைவுகளை பற்றி சிஎஸ்ஓ குறிப்பிடவில்லை. அக்டோபர் மாதம் வரை மட்டுமே துறைவாரியான தகவல்கள் உள்ளன.

SCROLL FOR NEXT