வணிகம்

இணையத்தில் சம வாய்ப்புக்கு ஆதரவாக ஏர்டெல் ஜீரோவில் இருந்து வெளியேறியது பிளிப்கார்ட்

செய்திப்பிரிவு

இணைய தளத்தில் சம வாய்ப்புக்கு (Net Neutrality) ஆதரவாக, ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இருந்து வெளியேற பிளிப்கார்ட் முடிவெடுத்திருக்கிறது. இணையத்தை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்ற விவாதம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த சூழ்நிலையில் பிளிப்கார்ட் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.

நீண்ட விவாதத்துக்கு பிறகு ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணையும் முடிவில் இருந்து நாங்கள் வெளியேறி இருக்கிறோம். இணையத்தில் சம வாய்ப்பை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இணையம் பயன்படுத்துவதில் அளவு, வேகம், சேவை உள்ளிட்ட எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாக இணையம் இருக்க வேண்டும் என்று பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.

ஏர்டெல் ஜீரோ என்னும் திட்டத்தை கடந்த வாரம் ஏர்டெல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இணையம் பயன் படுத்துவதற்கு டேட்டா கட்டணம் ஏதும் இல்லாமல் சில செயலிகள், விளையாட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காகும் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து வசூலித்து கொள்வது ஏர்டெல் நிறுவனத்தின் திட்டமாகும்.

இது ஒரு புதுமையான திட்டம். இதன் மூலம் அனைவருக்கும் வெற்றி என்று இந்த திட்டம் குறித்து ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உயர்நிலைக் குழு

இது குறித்து, பொதுமக்களின் கருத்துகளை தொலை தொடர்பு துறை ஆணையமான டிராய் கேட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்தினையும், அதற்கு பதில் கருத்துகளை வரும் மே மாதம் 8-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று டிராய் தெரிவித்திருக்கிறது. தவிர இந்த விஷயத்துக்கு ஒரு உயர்நிலைக் குழுவினையும் டிராய் அமைத்திருக்கிறது.

3 லட்சத்துக்கும் மேலானவர்கள் இது குறித்து டிராய்க்கு கருத்துகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இணையத்தில் சம வாய்ப்பு குறித்து அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தக்குழு இன்னும் ஒரு மாதத்தில் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் கொள்கை முடிவினை அறிவிக்கும் என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தவிர நிறுவனங்களுக்கு இடையே போட்டியை ஒழுங்கு செய்யும் ஆணையமும் (சிசிஐ) இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ஏர்டெல், ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் யுனிநார் ஆகிய நிறுவ னங்கள் சில குறிப்பிட்ட செயலிகளுக்கு இலவச சேவை கொடுக்க முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து சிசிஐ விசாரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இதனிடைய, இணைய தள சம வாய்ப்பினை நாங்களும் ஆதரிக்கிறோம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வழங்கும் இலவச கட்டணம் தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்று ஏர்டெல் தெரிவித்திருக்கிறது.

என் இணையம் என் உரிமை

இணையத்தில் சமநிலை பாதிக்கப்படும் போது, பணக்காரர்களுக்கு அல்லது பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு எதிராகச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்களது இணையம் வேகமாகவும் மற்றவர்களுடையது மெதுவாகவும் செயல்பட ஆரம்பிக்கும்.

இணையத்தின் சம வாய்ப்பு என்பது ஜனநாயகம் போன்றது. அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்டால் பணக்காரர்களின் குரலுக்கு அதிக மதிப்பு இருக்கும். உலகம் சமமாக, திறந்த மனதோடு இருக்க வேண்டும் என்றால் இணையத்தில் சம வாய்ப்பு அவசியம். ஒருவருக்கு ஒரு வாக்கு போல இணையத்திலும் சமநிலை வேண்டும். இல்லை எனில் பணக்காரர்களின் ஒரு ஓட்டின் மதிப்பு 100 ஆகவும், சாதாரணமானவர்களின் ஒரு ஓட்டுக்கு மதிப்பு ஒன்றுக்கும் கீழேயும் மதிப்பிட வாய்ப்பு இருக்கிறது.

ஏன் வெளியேறினோம்?

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதுதான் எங்களுடைய முதல் பணி. இணைய சுதந்திரத்தைத் தடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டேட்டாவை இலவசமாக வழங்கும் திட்டத்தில், நீண்ட கால நோக்கில் விதிமுறைகளை மீறுவதற்கு வாய்ப்பு அதிகம். வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ அதையே தொடர்ந்து செய்வோம். இணைய சமநிலை என்பது ஜனநாயகம் போன்றது. இணையத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகேஷ் பன்சால் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT