நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்ட தேசிய விமான போக்கு வரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த துறையின் வளர்ச்சிக்கு இந்த கொள்கைகள் உதவியாக இருக்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். வரும் 2022-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய விமானத் துறையாக இந்தியா இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 2014-ம் ஆண்டு இதற்கான வரைவு கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதற்கான வரைவு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த துறையை சேர்ந்த வல்லுநர்களுடன் எட்டு மாதமாக நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகு மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னதாக இதற்கான ஒப்புதல் கடந்த நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5/20 விதியில் (இந்திய விமான நிறுவனங்கள் ஐந்து வருட அனுபவம் மற்றும் 20 விமானங்கள் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு போக்குவரத்தை தொடங்க முடியும்) இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இதற்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏற்பட்டது.
ஏற்கெனவே பல காலமாக இருக்கும் விமான நிறுவனங்கள் இந்த விதி இருக்க வேண்டும் என்று கூறின. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அந்த விதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
5/20 விதியில் மாற்றம்!
புதிய கொள்கையில் 5/20 விதியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. அதன் படி இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்க 5 வருடம் என்பது கட்டாயம் கிடை யாது. ஆனால் அதே சமயத்தில் ஒரு விமான நிறுவனத்திடம் 20 விமானங்கள் அல்லது 20 சதவீதம் விமானங்கள் இதில் எது அதிகமோ அந்த எண்ணிக்கையிலான விமானங்களை உள்நாட்டு போக்கு வரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி பார்க்கும் போது 20 விமானங்களுக்கு மேல் இருக்கும் விமான நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும்.
இந்த விதி புதிதாக தொடங் கப்பட்ட விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங் களுக்கு சாதகமாக இருந்தாலும், இந்த நிறுவனங்கள் வசம் தலா 11 விமானங்கள் மட்டுமே உள்ளன. புதிதாக தொடங்கிய நிறுவனங்கள் 20 விமானங்கள் என்னும் எண்ணிக்கையை எட்ட 3 வருடம் முதல் 4 வருடங்கள் ஆகும் என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 30 நிமிட பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.1,200-ம் ஒரு மணி நேர பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500-ம் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்து கொள்கை வெளியிடப்பட்டதன் காரணமாக இந்த துறை பங்குகள் உயர்ந்தன. ஸ்பைஸ்ஜெட் பங்கு 3.51 சதவீதம் உயர்ந்தது, இண்டிகோ பங்கு 2.13 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் பங்கு 0.39 சதவீதமும் உயர்ந்தது.