வணிகம்

கச்சா எண்ணெய் விலை 84 டாலருக்கு கீழே சரிந்தது

ராய்ட்டர்ஸ், பிடிஐ

கச்சா எண்ணெய் (பிரென்ட்) 47 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று குறைந்து ஒரு பீப்பாய் 84 டாலருக்கு கீழே சரிந்து 83.92 டாலரை தொட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 80.89 டாலராக இருந்தது. அதன் பிறகு சரிவது இப்போதுதான். சர்வதேச அளவிலான மந்தமான வளர்ச்சி மற்றும் அதிக உற்பத்தி ஆகிய காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

கடந்த ஜூன் மாத விலையுடன் ஒப்பிடும்போது 25 சதவீத அளவுக்கு சரிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் அகழ்வு பணியை செய்யும் நாடுகள், தங்களது சந்தை பங்களிப்பை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் போட்டி போட்டுக்கொண்டு அகழ்வு செய்வதால் உற்பத்தி அதிகரித்து விலை குறைகிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது இந்தியாவுக்கு நல்லது என்று நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம் தெரிவித்திருக்கிறார்.

அதற்காக மிகவும் சாதகமான சூழல் இருக்கிறது என்று நினைக்க வேண்டும். வருங்காலத்தில் எப்படி கச்சா எண்ணெய் விலை நிலவரம் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார். குளிர்கால தேவை மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகள் இருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம் என்றும் அவர் கூறினார்.

அதே சமயத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவதன் காரணமாக நமது மானிய தொகை குறையும். இறக்குமதி தொகையும் குறைவதால் நிதிப்பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டீசலுக்கு கொடுக்கப்படும் மானியம் குறைந்து லாபம் வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு லிட்டருக்கு 1.90 ரூபாய் லாபம் வர ஆரம்பித்திருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT