வாராக் கடன் பிரச்சினையில் வங்கிகள் தங்களுக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழித்து தப்பிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் கூறினார்.
பட்ஜெட் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு இக்ஃபாய் ஏற்பாடு செய்திருந்தது. உயர் கல்விக்கான அறக்கட்டளையான இந்த அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளதால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது நீங்கி வருகிறது. இருப்பினும் இதனால் சில துறைகள் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். இதற்கு மாற்று வழிகளை அத்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பேசல் 1 பரிந்துரையின்படி கூட வங்கியின் மொத்த மூலதனமானது அதன் சொத்து மதிப்பில் 8 சதவீத அளவுக்கு இருந்தாக வேண்டும். இதன்படி ரூ. 10 ஆயிரம் கோடி நடப்பு நிதி ஆண்டில் (2017-18) வங்கிகளுக்கு ஒதுக்கீடு செய்யப் படும் என பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டுள்ளது. இதை ரூ.1 லட்சம் கோடியாகவோ அல்லது ரூ. 2 லட்சம் கோடியுடனோ ஒப்பிட முடியாது.
இப்போதைய சூழலில் வங்கித் துறைகான ஒதுக்கீடு போதுமான தல்ல என்பது என் கருத்து. இந்த ஒதுக்கீட்டின் மூலம் வங்கி கள் தங்களது வாராக் கடன் பிரச்சினையிலிருந்து தங்களுக் குள்ள பொறுப்புகளிலிருந்து விலகிவிட முடியாது. வாராக் கடன் சொத்துகளை திரும்பப் பெறுவதன் மூலம்தான் வங்கிகள் தங்களது சொத்து மதிப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். எனவே வங்கிகள் அதிகபட்சம் வாராக் கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்கராஜன் கூறினார்.
அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த ரங்கராஜன், இது மிகச் சிறந்த நோக்கங்களை உள்ளடக்கிய பட்ஜெட், ஆனால் அது எவ்விதம் செயல்படுத்தப்படப் போகிறது என்பதிலிருந்துதான் இதன் தனித்தன்மை வெளிப்படும் என்று கருத்து கூறினார்.
வரும் நிதி ஆண்டுக்கான (2017-18) பட்ஜெட்டில் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 3.5 சதவீத இலக்கை விட குறைவானதாகும். ஆனால் முன்னர் குறிப்பிட்டிருந்த 3 சதவீதத்தை விட சற்று அதிகம் என்று சுட்டிக் காட்டினார்.