மென்பொருள் துறையின் முக்கிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 0.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,920 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,915 கோடியாக இருந்தது. டாலர் மதிப்பில் நிகர லாபம் 5.4 சதவீதம் சரிந்திருக்கிறது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 11.4 சதவீதம் உயர்ந்து 10,341 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.9,283 கோடி யாக இருந்தது. சென்னை மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சானா கருத்து கூற மறுத்துவிட்டார். அந்த சூழ்நிலையை நாங்கள் சரியாக நிர்வகித்தோம். எங்களுக்கு பாதிப்புகள் மிகவும் குறைவு. சென்னையில் 30,000 பணியாளர்கள் உள்ளனர் என்றார்.
நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைகள் உயர்ந்த போதும் ஹெச்சிஎல் பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 0.49 சதவீதம் சரிந்து 838.25 ரூபாயில் முடிவடைந்தது.