இந்தியாவின் பங்குச் சந்தைகள் இன்று இரண்டு சதவிகிதத்துக்கு மேலே உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 451 புள்ளிகள் (அதாவது 2.21%) 20,850.74 புள்ளிகளில் முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 114.67 புள்ளிகள் (2.19%) உயர்ந்து 6,189 புள்ளியில் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச முக்கிய பங்குச் சந்தைகளும் உயர்ந்தன. குறிப்பாக ஹாங்செங் சந்தை 2.65 சதவிகிதம் உயர்ந்தது. ஷாங்காய் காம்போசிட் 2.79 சதவிகிதம் உயர்ந்தது. அக்டோபர் 18-ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் சந்தை திங்கட்கிழமை உயர்ந்தது.
பங்குச் சந்தைகள் உயர்ந்ததற்கு சீனாவின் கொள்கை மாற்றங்களும் ஒரு காரணமாகும். ஒரு குழந்தை திட்டத்தில் மாற்றம் செய்தது, நிதித் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்குமாறு மாற்றங்களைச் செய்தது போன்ற காரணங்களால் இந்திய சந்தைகள் உயர்ந்தது. மேலும், அமெரிக்க ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்னும் சில காலத்துக்கு தொடரும் என்ற காரணத்தாலும் அன்னிய முதலீடு அதிகரித்தது.
பேங்கெக்ஸ் 388 புள்ளிகளும், கேபிடல் குட்ஸ் இண்டெக்ஸ் 283 புள்ளிகளும், எஃப்,எம்.சி.ஜி இண்டெக்ஸ் 162 புள்ளிகளும், ஐ.டி இண்டெக்ஸ் 143 புள்ளிகளும் உயர்ந்தன.கடந்த இரு வாரங்களில் அதிகபட்ச அளவுக்கு உயர்ந்திருப்பதால், முதலீட்டாளர்களின் முதலீடு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
லார்சன் அண்ட் டுப்ரோ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி போன்ற பங்குகள் முறையே 3.9 மற்றும் 3.78 சதவிகிதம் உயர்ந்தது. மேலும், ஐ.டி.சி. ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மாறாக சேசா ஸ்டெர்லைட் 1.36 சதவிகிதம் சரிந்தது. மேலும் கோல் இந்தியா, சிப்லா, பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் சிறிதளவு சரிந்தது
ரூபாய் மதிப்பு அதிகரிப்பு
தொடர்ந்து மூன்றாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 70 பைசா அளவுக்கு உயர்ந்து 62.41 ரூபாயாக ஒரு டாலரின் மதிப்பு இருந்தது.