வணிகம்

பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

பிடிஐ

இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சீனா மற்றும் அமெரிக்காவை விட அதிகமான முதலீடு இந்தியாவிற்கு வந்திருப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் பொழுது சீனா மற்றும் அமெரிக்காவை விட அதிகமாக இந்தியாவிற்கு முதலீடு வந்திருக்கிறது. இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதையே இந்த முதலீடுகள் காட்டுகின்றன.

வாஜ்பாய் அரசாங்கத்திற்கு முன் இந்திய பொருளாதாரத்தை பற்றி எதிர்மறை எண்ணம் இருந்தது. வாஜ்பாய் ஆட்சியில் வளர்ச்சி வீதம் 8.4 சதவீதத்தை அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக வளர்ச்சி வீதம் 6 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 வருட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது.

மிகச் சிறந்த முறையில் செயல்படும் துறையாக ரயில்வே இருக்கிறது. பல லட்சம் கோடி முதலீடுகள் ரயில்வே துறைக்கு வந்துள்ளன. வரும் நாட்களில் பயணிகள் மேலும் அதிக வசதிகளை பெறுவார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் இருப்பது போல் வசதிகளை நம் நாட்டு பயணிகள் பெறுவார்கள்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், ரயில்வே துறையில் 48,000 கோடி ரூபாயாக இருந்த முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாயாக கடந்த வருடம் உயர்ந்துள்ளது. இது மேலும் 1.21 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று தெரிவித்தார். மேலும் ரயில்வே அமைச்சகம் 2020-ம் ஆண்டிற்குள் 8.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT