வணிகம்

ரூ.1,400 கோடி முதலீட்டில் ரேமண்ட் புதிய ஆலை

செய்திப்பிரிவு

முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனமான ரேமண்ட் ரூ.1,400 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும் 300 புதிய விற்பனை யகங்களை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதியில் புதிய ஆலையை திறப்பதற்காக இந்த முதலீட்டை மேற்கொள்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆலை செயல்படத் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

முதல் கட்டமாக ரூ.200 கோடியை நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த புதிய ஆலை பருத்திச் சட்டைகள், லினன் மற்றும் டெனிம் ஆடைகளை தயாரிக்க உள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கெளதம் ஹரி சிங்கானியா கூறியதாவது:

புதிய ஆலையிலிருந்து இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி தொடங்கும். முதற்கட்டமாக ரூ.200 கோடி முதலீடு செய்கிறோம். படிப்படியாக ரூ.1,400 கோடி முதலீடு செய்ய உள்ளோம். 500 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை முழு செயல்பாட்டை அடையும்போது 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். இந்த ஆலை ரேமண்ட் பிராண்ட் ஆடைகளை உற்பத்தி செய்வதுடன் தேவைகளுக்கு ஏற்ப இதர பிராண்டு தயாரிப்புகளை மேற்கொள்ளும்.

நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு ஏற்ப இந்த ஆலை உதவிகரமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் புதிதாக 300 சில்லரை விற்பனை மையங்களையும் திறக்க உள்ளது என்றார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT