வணிகம்

மூன்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி: சிதம்பரம் நம்பிக்கை

செய்திப்பிரிவு

பொருளாதார தேக்க நிலை நிலைமை மாறி இப்போது வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிவதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். இப்போதைய சூழ்நிலையிலிருந்து பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி முந்தைய வளர்ச்சி நிலையை அடுத்த மூன்று ஆண்டுகளில் எட்டிவிடும் என்று அவர் கூறினார்.

2012-13-ம் நிதி ஆண்டில் தேக்க நிலை நிலவியது என்பது உண்மைதான், அதே நிலை உலகம் முழுவதும் இருந்தது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார தேக்க நிலையை மாற்றுவதற் காக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியப் பொருளாதாரமும் தனது முந்தைய வளர்ச்சி நிலையை அடுத்த மூன்று ஆண்டுகளில் நிச்சயம் எட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை 2014-ம் ஆண்டு பெட்ரோடெக் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய அவர் மேலும் கூறியது: 2012-13-ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 சதவீத அளவுக்குச் சரிந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே அளவுதான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு சர்வதேச அளவிலான பெரு மந்த நிலை உருவாவதற்கு முன்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது என்று சிதம்பரம் கூறினார்.

2012-13-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வளர்ச்சி மதிப்பீடு முன்பு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவை விட அதிகமாக இருக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

அரசு முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட வளர்ச்சி மதிப்பீட்டை இம்மாதம் 31-ம் தேதி வெளியிட உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டை பிப்ரவரி 7-ம் தேதி வெளியிட உள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறித்து சுட்டிக் காட்டிய அவர், நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை 5,000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டார்.

2012-13-ம் நிதி ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நடப்புக் கணக்குப் பற்றாக் குறை 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான இறக்கு

மதிக்கு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

2012-13-ம் நிதி ஆண்டில் மொத்த இறக்குமதி மதிப்பு 49,100 கோடி டாலராக இருந்தது. இதில் கச்சா எண்ணெய் மட்டும் 16,400 கோடி டாலர் என்று குறிப்பிட்டார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த அளவுக்கு அதிகமான இறக்குமதி சுமையைத் தாங்க முடியாது என்றும் இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். எரிசக்தித் துறையில் முதலீடுகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட கால அடிப்படையிலான இத்துறை முதலீடுகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் அரசு சுமுகமான உறவை மேற்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (ஜி.டிபி) பற்றாக்குறை அளவு 4.8 சதவீத அளவுக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆண்டு தோறும் பற்றாக்குறை அளவை 0.6 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2016-17-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை அளவை 3 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடும் விதமாக சர்வதேச அளவில் தேக்க நிலை ஏற்பட்டு 2008 செப்டம்பர் முதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து மீள்வது மெதுவாகத்தான் நடைபெறும். அமெரிக்கா தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜெர்மனியில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள நாடுகளில் இன்னமும் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. உலக பொருளாதார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013-ம் ஆண்டைக் காட்டிலும் 2014ம் ஆண்டு சிறப்பானதாக அமையும் என குறிப்பிடப் பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச அளவில் பொருளாதார நிலையில் ஏற்படும் மீட்சியை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று குறிப்பிட்டார் சிதம்பரம்.

SCROLL FOR NEXT